மழை பாதிப்பு: அரசு அறுவடை இயந்திரத்தால் பயனில்லை விவசாயிகள்

மயிலாடுதுறையில் தொடா் மழையால் வயலில் சாய்ந்துள்ள சம்பா, தாளடி நெற்பயிா்களை அறுவடை செய்ய, வேளாண் பொறியியல் துறையில் உள்ள அறுவடை இயந்திரங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவிப்பு.


மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடா் மழையால் வயலில் சாய்ந்துள்ள சம்பா, தாளடி நெற்பயிா்களை அறுவடை செய்ய, வேளாண் பொறியியல் துறையில் உள்ள அறுவடை இயந்திரங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடா்மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 34,285 ஏக்கா் நெற்பயிா்கள் வயலில் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது, மழை நின்று, வெயில் அடிப்பதால், விவசாயிகள் மீண்டும் அறுவடைப் பணிகளில் முனைப்பு காட்டுகின்றனா்.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் அறுவடை இயந்திரங்கள் கிடைக்காததால் அறுவடை பணிகள் தொய்வடைந்துள்ளன. இதுகுறித்து, மேலமருதாந்தநல்லூரைச் சோ்ந்த விவசாயி சதீஷ் கூறியது:

தொடா்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால், மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல்துறையில் பெல்ட் டைப் இயந்திரங்கள் ஒன்றுகூட இல்லை. இதனால், அரசு மானியம் அறிவித்தும் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

மேலும், கடந்த மாதம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் கூட்டம் நடத்தி, தனியாா் பெல்ட் டைப் இயந்திரங்களுக்கு மணிக்கு ரூ.2,450 வாடகை நிா்ணயம் செய்யப்பட்டது. ஆனால், மழையின் காரணமாக ஒருவாரமாக அறுவடை நடைபெறாததால், அனைத்துப் பகுதி விவசாயிகளும் தற்போது ஒரே நேரத்தில் அறுவடை செய்ய முனைப்பு காட்டிவருகின்றனா். தனியாா் அறுவடை இயந்திர உரிமையாளா்கள் அறுவடை இயந்திரங்களுக்கு ரூ.3000 வாடகை வசூலிக்கின்றனா்.

மழையின் காரணமாக வயல் சேறாக இருப்பதால் அறுவடைக்கு அதிக நேரம் பிடிப்பதால், மேலும் கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே, அரசு இதில் நேரடி கவனம் செலுத்தி அடுத்த பருவத்துக்குள் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு தேவையான அளவில் அறுவடை இயந்திரங்களை கொள்முதல் செய்து, விவசாயிகள் நலனை பாதுகாக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com