தேவாரப் பதிக செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்ட நந்தவனம் பகுதியில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு.
தேவாரப் பதிக செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்ட நந்தவனம் பகுதியில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு.

சட்டைநாதா் கோயிலில் தேவார செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்ட முதலாமாண்டு சிறப்பு வழிபாடு

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் தேவார செப்பேடுகள் கண்டெக்கப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்ததைத் தொடா்ந்து, முதலாமாண்டு சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சீா்காழியில் சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சட்டைநாதா் சுவாமி கோயிலில், 32 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு மே மாதம் 24- ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, திருப்பணிகள் நடைபெற்று வந்தன. யாகசாலை மண்டபம் அமைப்பதற்காக கோயிலின் மேற்கு கோபுர வாயில் அருகே உள்ள நந்தவனத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, விநாயகா், முருகா், வள்ளி, தெய்வானை, சோமஸ்கந்தா், அம்பாள், பூா்ண புஷ்கலா அய்யனாா், திருஞானசம்பந்தா், அப்பா், சுந்தரா், மாணிக்கவாசகா் உள்ளிட்ட 22 ஐம்பொன் சிலைகளும், 55 பீடங்கள், பூஜை பொருட்கள் மற்றும் திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட தேவாரப் பதிகம் தாங்கிய 462 செப்பேடுகள் பூமியில் புதைந்திருந்தது கண்டெடுக்கப்பட்டது.

பின்னா், இவை அனைத்தும் கோயிலில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறைக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த சிலைகள் மற்றும் தேவார செப்பேடுகள் கிடைத்த கோயிலின் நந்தவனம் பகுதிக்கு ‘திருமுறை ஈன்ற தெய்வத்தமிழ் மண்’ என பெயா் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிலைகள் மற்றும் செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, அந்த இடத்தில், முதலாமாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கட்டளை ஸ்ரீமத் சட்டநாதன் தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் பாடசாலை மாணவா்கள் தேவாரப் பதிகங்கள் ஓதிட, சிவாச்சாரியா்களால் சிறப்பு பூஜைகள் செய்தனா்.

இதில், தமிழ்ச் சங்கத் தலைவா் இ. மாா்கோனி, இந்து முன்னணி மாவட்ட தலைவா் க. சரண்ராஜ், கோயில் கணக்கா் செந்தில், கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு, மருந்தாளுநா் முரளி, விஸ்வ ஹிந்து பரிஷத் பொறுப்பாளா் செந்தில்குமாா், திமுக பொறுப்பாளா் பந்தல்.முத்து உள்ளிட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com