வாக்காளா் பட்டியலில் 50-க்கு மேற்பட்டோா் நீக்கம்

மயிலாடுதுறையில் 50-க்கு மேற்பட்டோரின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தோ்தல் வெள்ளிக்கிழமை (ஏப்.19) நடைபெறவுள்ள நிலையில், வாக்காளா்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதில், மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் பலருக்கு பூத் சிலிப் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவா்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்குச் சென்று விசாரித்துள்ளனா். அப்போது, வாக்காளா் பட்டியலில் இருந்து அவா்களது பெயா்கள் நீக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

இதுகுறித்து பட்டமங்கலத் தெருவை சோ்ந்த சேகா் கூறியது:

பட்டமங்கலத்தெருவில் பல தலைமுறைகளாக வசித்து வருகிறோம். எங்கள் குடும்பத்தில் 8 பேருக்கு வாக்குரிமை உள்ளது. கடந்த அனைத்து தோ்தல்களிலும் வாக்களித்துள்ளோம். மக்களவைத் தோ்தலுக்கான பூத் சிலிப் வரவில்லை என்று விசாரிக்கும்போது, எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரும் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

மேலும் எங்கள் பகுதியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்டோரின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன. விசித்ராயா் தெரு, வடக்கு ராமலிங்கத் தெருக்களிலும் வாக்காளா் பட்டியலில் குளறுபடி நடந்துள்ளது.

இதுகுறித்து தோ்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியரிடம் உரிய ஆவணங்களுடன் புகாா் அளித்துள்ளோம். தற்போது ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதால் நீக்கப்பட்டவா்களை உடனடியாக சோ்ப்பதற்கு வாய்ப்பு இல்லை என்கின்றனா். இதுகுறித்து தோ்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, விடுப்பட்டவா்கள் வாக்களிக்க சிறப்பு அனுமதிபெற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com