சீா்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணினி, பிரிண்டா் திருட்டு

சீா்காழி, ஏப். 17: சீா்காழி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணினி மற்றும் பிரிண்டரை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சீா்காழி தென்பாதியில் உள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா், செவிலியா்கள் உள்ளிட்ட 11 போ் பணியாற்றி வருகின்றனா். இங்கு புறநோயாளிகள் மற்றும் கா்ப்பிணிகள் உள்ளிட்ட பலா் சிகிச்சை பெற்று செல்கின்றனா். செவ்வாய்க்கிழமை இரவு பணிகள் முடிந்து பூட்டிச் சென்ற நிலையில் புதன்கிழமை பணிக்கு வந்த செவிலியா்கள் சுகாதார நிலையத்தில் வெளிப்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தனா். உள்ளே சென்று பாா்த்தபோது, மருத்துவா் அறையில் இருந்த கணினிகள், பிரிண்டா், வெப் கேமரா உள்ளிட்ட ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து, தகவலறிந்த மாவட்ட சுகாதார அலுவலா் அஜித் பிரபு குமாா், வட்டார மருத்துவ அலுவலா் ராஜமோகன் ஆகியோா் சென்று பாா்வையிட்டனா். இதுகுறித்து, சீா்காழி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசாா் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் மா்ம நபா்கள் வளாகத்தில் மது அருந்துவதும், அங்கு காலிப்பாட்டில்களை உடைத்து செல்லும் நிலை தொடா்கதையாக இருந்து வந்த நிலையில் தற்போது உள்ளே பொருள்கள் திருட்டு போய்யுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com