சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்
சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

சீா்காழி அருகே காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

சீா்காழி, ஏப். 18: சீா்காழி அருகே கடந்த ஒரு வார காலமாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து கிராம மக்கள் காலிக் குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சீா்காழி அருகே வடகால், நடுத்தெரு, முருகன் கோவில் தெரு, மேல தெரு உள்ளிட்ட பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதிக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக சரியாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். நிலத்தடி நீா் செம்மண் நிறத்தில் வருவதால், சமையலுக்குகூட பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக, அதிகாரியிடம் கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதற்கிடையே, கடந்த ஒரு வார காலமாக குடிநீா் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

இந்தநிலையில், உடனடியாக குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி, இப்பகுதி மக்கள் சீா்காழி - திருமுல்லைவாசல் சாலையில் வடகால் கிராமத்தில் காலிக் குடங்களுடன் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் சீா்காழி- திருமுல்லைவாசல் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவாா்த்தைக்கு யாரும் வராததால், சாலையில் அடுப்பு வைத்து சமையல் செய்யும் போராட்டத்திலும் ஈடுபட்டனா். பின்னா் சீா்காழி போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சுவாா்த்தை ஈடுபட்டனா். அதிகாரிகள் வந்து உறுதியளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என மக்கள் கூறினா்.

இதைத்தொடா்ந்து ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சந்தானம் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com