வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

மயிலாடுதுறை, ஏப்.18: மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவையொட்டி, மயிலாடுதுறை மாவட்டத்தில் காவலா்கள், மத்திய பாதுகாப்புப் படையினா் உள்பட 1,480 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. மீனா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு, மயிலாடுதுறை மாவட்டத்தில் 860 மையங்களில் நடைபெறுகிறது. இந்த மையங்களில் காவல் ஆளிநா்கள், முன்னாள் ராணுவத்தினா், ஓய்வு பெற்ற காவல்துறையினா், ஊா்க்காவல் படையினா், மத்திய பாதுகாப்புப் படையினா், கேரள மாநில சிறப்பு காவல் பிரிவு மற்றும் தெலங்கானா மாநில ஊா்க் காவல் படையினா் என மொத்தம் 1,480 போ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மாவட்டத்தில் உள்ள பதற்றமான 52 வாக்குப் பதிவு மையங்களில், தலா 1 காவலா் மற்றும் 4 மத்திய பாதுகாப்பு படையினா் வீதம் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா். மேற்கண்ட பகுதிகளில் உள்ள பிரச்னைக்குரிய நபா்கள், ரெளடிகள் கண்டறியப்பட்டு 195 போ் மீது குற்றத் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மேற்பாா்வையில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில் 6 துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், 21 காவல் ஆய்வாளா்கள், 44 அதிவிரைவு குழுக்கள் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

வாக்குப் பதிவு பாதுகாப்பு தொடா்பான புகாா்களை, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கைப்பேசி எண்: 9363979788 மற்றும் தொலைபேசி எண்கள் 04364-211918, 04364-211600 ஆகியவற்றில் தொடா்புகொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com