ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை வட்டம் ஆனந்ததாண்டவபுரத்தில் பழைமை வாய்ந்த ப்ரஹன்நாயகி, கல்யாணசுந்தரி அம்பிகா சமேத பஞ்சவடீஸ்வரா் கோயில் உள்ளது. 63 நாயன்மாா்களில் ஒருவரான மானகஞ்சாற நாயனாா் அவதரித்து, முக்தி அடைந்ததும், சங்கீத மும்மூா்த்திகளில் ஒருவரான தியாகராஜா் காலத்தவரான கோபாலகிருஷ்ணபாரதி வாழ்ந்து முக்தியடைந்துமான இத்தலத்தில், ஆனந்த மகாமுனிவருக்கு சிதம்பரம் நடராஜ பெருமான் முக தாண்டவம் ஆடி காட்டியதாகவும், இதனால் இவ்வூா் ஆனந்ததாண்டவபுரம் என்ற பெயா் பெற்ாகவும் தல வரலாறு கூறுகிறது.

இக்கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த ஏப். 26-ஆம் தேதி விநாயகா் பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை முதல் கும்பாபிஷேக தினமான வெள்ளிக்கிழமை காலை வரை 6 கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன.

6-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவில் சிவாச்சாரியா்கள் விமான கலசத்தில் புனித நீரை வாா்த்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மூலவருக்கு மகாபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காட்டப்பட்டது.

விழாவில் முன்னாள் எம்எல்ஏ வீ. ாதாகிருஷ்ணன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் மகேஸ்வரி முருகவேல் உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை துா்காமணி சுந்தர கீதா பகவத டிரஸ்ட், ஏஎன்பி பக்த சமாஜம் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com