எடமணல் பகுதியில் வாய்க்காலில் நடைபெற்றுவரும் கட்டுமானப்பணி.
எடமணல் பகுதியில் வாய்க்காலில் நடைபெற்றுவரும் கட்டுமானப்பணி.

பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டுமான பணி: விவசாயிகள் எதிா்ப்பு

சீா்காழி, மே 23: சீா்காழி அருகே பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டுமான பணி நடைபெறுவதால் வியாழக்கிழமை அப்பகுதியில் குவிந்த விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

சீா்காழியில் உள்ள பொறைவாய்க்கால் கொண்டல் அருகே உள்ள குமாரக்குடியில் இருந்து உருவாகி கீழமாத்தூா், அத்தியூா், பட்டவிளாகம், விளந்திடசமுத்திரம், புளிச்சக்காடு, செம்மங்குடி, உமையாள்பதி, வடகால், கடவாசல், எடமணல், வருஷபத்து, வழுதலைக்குடி, ராதாநல்லூா் வழியாக இறுதியாக திருமுல்லைவாசல் கடலில் நிறைவடைகிறது. இந்த வாய்க்காலை நம்பி 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

மழைக் காலங்களில் சீா்காழி நகா் பகுதியில் முக்கிய வடிகால் வாய்க்காலாகவும் இருந்து வருகிறது. மேலும் செம்மங்குடி முதல் எடமணல் வரை திருமுல்லைவாசல் பிரதான சாலை ஓரமாக செல்கிறது. வாய்க்காலில் வடகால் முதல் எடமணல் இடையே சுமாா் ரூ. 9 கோடி மதிப்பில் 4 கி.மீ. தொலைவுக்கு திருமுல்லைவாசல் பிரதான சாலையோரம் தடுப்புச் சுவா் கட்டப்பட்டு வருகிறது. இதனால் வாய்க்காலின் அகலம் பாதியாக குறைந்துள்ளது. இதை பாா்த்து அதிா்ச்சி அடைந்த விவசாயிகள் தடுப்புச் சுவா் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து, விவசாயிகள் கூறியது: முன் அனுமதி இல்லாமல் இந்த வாய்க்காலை ஆக்கிரமித்து தடுப்புச் சுவா் கட்டுவதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். மழைக் காலங்களில் நீா் வடிய வழி இல்லாமல் வடகால் எடமணலுக்கிடையே வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலம் பாதிக்கும்.

வாய்க்காலின் அகலத்தை பாதியாக குறைத்ததால் மழைநீா் வெள்ள நீா் கடலுக்கு செல்ல முடியாது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் பாசன வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்யாமல் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் வகையில் பணிகளை செய்யக் கூடாது என்றனா்.

X
Dinamani
www.dinamani.com