குடவாசல் அருகே13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலைகள், கல்வெட்டு கண்டெடுப்பு

குடவாசல் அருகே கண்டெடுக்கப்பட்ட சிலைகள் மற்றும் கல்வெட்டு 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என, கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன்

குடவாசல் அருகே கண்டெடுக்கப்பட்ட சிலைகள் மற்றும் கல்வெட்டு 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என, கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
குடவாசல் வட்டம், எண்கண் அருகேயுள்ள பூங்காவூரில் வயல் பகுதியில் புதர் மண்டிய இடத்தில் கற்சிலைகள், தூண்கள் கிடந்துள்ளன. இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த சிங்காரம், மனோகர் உள்ளிட்ட சிவனடியார்கள் அந்த இடத்தை சுத்தம் செய்தபோது, அங்கு சிவலிங்கம், அம்பாள், லிங்கம், நந்தி, லெட்சுமி நாராயணர், நாகம் உள்ளிட்ட கற்சிலைகள் கிடைத்துள்ளன. தகவலறிந்த கிராம மக்கள் கடந்த ஒரு வாரமாக அந்த சிலைகளை வழிபட்டு வருகின்றனர்.
இந்த சிலைகள் குறித்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: இங்குள்ள நந்தி, சிவலிங்கம், சண்டிகேசுவரர் உள்ளிட்ட சிலைகள் கி.பி.13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளாக உள்ளன. லெட்சுமி நாராயணர் சிலையும், அம்பாள் சிலையும் 14, 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். 13-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஏற்பட்ட படையெடுப்புகளால் இந்த பூங்காவூரில் இருந்த கோயில் சிதிலமடைந்திருக்க வாய்ப்புள்ளது. பின்னர் வந்த விஜய நகர அரசர்களால் கோயில் மற்றும் சிலைகள் மீண்டும் பாதுகாக்கப்பட்டிருக்கலாம். குறிப்பாக, அம்பாள் சிலையின் பீடத்தில் கிரந்த எழுத்துகள் உள்ளன. அவற்றை ஆய்வு செய்தபோது, அந்த எழுத்துகள் அம்மனின் சக்தியை அதிகரிக்கக் கூடிய வகையில் செய்யப்படும் மந்திரம் என தெரிகிறது. இவ்வகை பீடங்கள் அபூர்வமானது என்றார்.
இதுகுறித்து, இந்த கிராமத்தைச்சேர்ந்த தீபா என்பவர் கூறியது: எங்கள் ஊர் மிகச்சிறிய கிராமம். இங்கு கிடைத்துள்ள சிறப்பு வாய்ந்த இந்த சிலைகளுக்கு தினமும் பூஜைகள் செய்து வருகிறோம். தொடர்ந்து வழிபட தாற்காலிக கொட்டகைகள் அமைக்க முடிவெடுத்துள்ளோம் என்றார்.
இதுகுறித்து, பத்மநாபன் கூறியதாவது: நீண்ட காலமாக இந்த சிலைகள் இங்கு கிடந்துள்ளன. இதில், சண்டிகேஸ்வரர் சிலையின் தலைப் பகுதி உடைந்த நிலையில் உள்ளது. விரைவில், கோயில் கட்ட முயற்சி செய்து வருகிறோம். கொடையாளர்கள், ஆன்மிக அன்பர்கள் உதவியுடன் கோயில் எழுப்பப்படுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள உள்ளோம் என்றார்.
பழைமையையும், பக்தியையும் போற்றும் நம்நாட்டில், கோயில் சிலைகளையும், கலையையும் பாதுகாப்பது அரசின் கடமையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com