பேச்சுவார்த்தையில் உடன்பாடு: சர்க்கரை ஆலை ஊழியர்கள்  2-ஆவது நாளாகநடத்திய உள்ளிருப்புப் போராட்டம் வாபஸ்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், தலைஞாயிறு நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிலுவை ஊதியத்தை வழங்க

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், தலைஞாயிறு நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி ஊழியர்கள் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக மாலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என 250-க்கும் மேற்பட்டோருக்கு கடந்த ஜனவரி  மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கு மேலாண்மை இயக்குநர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், அனைத்துத் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஜெயகாந்தன் தலைமையில் சர்க்கரை ஆலை ஊழியர்கள், நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரியும், ஆலையை தொடர்ந்து  இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்  சர்க்கரை ஆலை வளாகத்தில் புதன்கிழமை இரவு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதற்கிடையில், இக்கோரிக்கைகள் தொடர்பாக ஆலையின் மேலாண்மை இயக்குநர் ஏ. பழனியம்மாள் மற்றும் மேலாளர் நடராஜன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் வியாழக்கிழமை மாலை பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது,  நிலுவை ஊதியம் மற்றும் போனஸ் அக்.12-ஆம் தேதிக்குள் வழங்கப்படும்  என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, ஊழியர்கள்  உள்ளிருப்புப் போராட்டத்தை  கைவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com