பாரம்பரியத்தை மீட்டெடுக்கும்மராட்டியத் தமிழர்

பாரம்பரிய நெல் ரக விதைகள், பாரம்பரிய நாட்டு பசுவினங்கள், பாரம்பரிய கல்செக்கு போன்ற தமிழ் பாரம்பரியத்தை மராட்டியத் தமிழர் ஒருவர் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டியாகத்

பாரம்பரிய நெல் ரக விதைகள், பாரம்பரிய நாட்டு பசுவினங்கள், பாரம்பரிய கல்செக்கு போன்ற தமிழ் பாரம்பரியத்தை மராட்டியத் தமிழர் ஒருவர் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்து வருகிறார்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், திருவீழிமிழலையைச் சேர்ந்தவர் குருபிரசாத். இவர் சென்னையில் தணிக்கையாளராக (ஆடிட்டர்) பணியாற்றி வருகிறார். வேலூர் மாவட்டம், பள்ளிக்கொண்டான் இவரது பூர்வீகம். இவரின் மூதாதையர்கள் 300 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிரத்துக்கு சென்றனர். இந்நிலையில், தமிழகத்துக்கு மீண்டும் வந்து குடியேற வேண்டுமென்ற ஆர்வத்தில் குருபிரசாத் திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் திருவீழிமிழலை கிராமத்தை தேர்ந்தெடுத்து 2008-ஆம் ஆண்டில் குடியேறினார்.
இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட குருபிரசாத், திருவீழிமிழலையில் விளைநிலங்கள் வாங்கி இயற்கை விவசாயம் செய்தார். இதில், ஓரளவு லாபம் பெறவே இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இவர் வசிக்கும் பகுதிகளில் பிரசாரம் செய்தார். இதைத் தொடர்ந்து, 2012-ஆம் ஆண்டு கோசாலையும் நிறுவி கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
இதுகுறித்து குருபிரசாத் கூறியது: பசுக்களை தமிழகத்தில் தெய்வமாக கருதி வரும் நிலையில், உடல் வலுவிழந்த பசு மற்றும் நோய்வாய்பட்ட பசுக்களை சிலர் அடிமாட்டுக்கு (கறிக்கு) விற்று விடுகின்றனர். அப்படி விற்கும் பசுக்களை எனது கோ சாலைக்கு பெற்று அவற்றை பேணிக்காத்து வருகிறேன். நாட்டுப் பசுவினங்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் வகையில் நாட்டு மாட்டு இனங்களான உம்பளச்சேரி, ஓங்கோல், பிருந்தாவன் கார்பார்க்கன் உள்ளிட்ட பசுவினங்களை வளர்த்து வருகிறோம். இந்த கோசாலையில் 20-க்கும் மேற்பட்ட பசுக்கள், 10-க்கும் மேற்பட்டு கன்றுகளும், காளைகளும் உள்ளன.
தவிர மாட்டுக் கழிவுகளிலிருந்து உரங்களாக பஞ்சகவ்வியம், ஐந்திலை கரைசல், தேமோ கரைசல், மீன் அமிலம், விபூதி, பல்பொடி, கொசுவிரட்டி, சாம்பிராணி உள்ளிட்டவைகளை இயற்கையாகவே தயாரித்து குறைந்த விலையில் விற்பனைக்கு வழங்குகிறோம் என்றார் குருபிரசாத்.
மராட்டியத் தமிழரின் முயற்சி வெற்றியை தந்துள்ள நிலையில், அடுத்ததாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் எண்ணெய்யை இயற்கை முறையில் மரச்செக்கு மூலம் தயாரித்து வழங்க இரண்டு மரச்செக்குகளை உருவாக்கி அதிலும் வெற்றி பெற்றுள்ளார். எண்ணெய் கல்செக்கு என்பது திரைப்படங்களில் மட்டுமே காணும் சூழலில், அதை மீட்டெடுத்து பாதுகாக்கும் வகையில் ஒரே கல்லில் கல்செக்கை தயார் செய்து வருகிறார்.
இதுமட்டுமன்றி, பாரம்பரிய நெல் விதைகளான மாப்பிள்ளை சம்பா, கிச்சடி சம்பா, கருங்குருவை உள்ளிட்ட நெல் ரகங்களை சேமித்து வைத்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார். நாமெல்லாம் மறந்துபோன நெல் கொட்டி வைக்கும் பத்தாயம் (குறுது) என்னும் மரத்திலான 15-க்கும் மேற்பட்ட அறைகளை இன்றளவும் பராமரித்து வருகிறார். வெளி மாநிலத்தில் பிறந்தாலும், தமிழர்களின் பாரம்பரிய விவசாயம் சார்ந்த நாட்டு இன மாடுகள், விவசாயத்தை காக்கும் வகையில் செயல்படும் இந்த மகாராஷ்டிர தமிழரை பாராட்டலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com