"மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசாக உள்ளது தமிழக அரசு'

மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் துரித செயல்பாடுகளைக் கொண்ட அரசாக உள்ளது

மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் துரித செயல்பாடுகளைக் கொண்ட அரசாக உள்ளது தமிழக அரசு என கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார்.
நாகை மாவட்டம், கீழையூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசுக் கட்டங்கள் திறப்பு விழாவில் அவர் மேலும் பேசியது :
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு, ஏழை எளிய மக்களுக்கு அனைத்து வகையிலும் உதவிடும் அரசாக விளங்குகிறது. இதன்படி, திருப்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2018-19 -ஆம் ஆண்டில் செப். 30 -ஆம் தேதி வரை மட்டும் ரூ. 76.68 லட்சம் பயிர்க் கடனாக வழங்கப்பட்டுள்ளது. நகைக் கடனாக ரூ. 4.47 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 2016-17  -ஆம் ஆண்டில் பயிர்க் கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகள் 2,540 பேருக்கு ரூ. 5.52 கோடி பயிர்க் கடனாக வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கான திட்டங்களை விரைந்து நிறைவேற்றி, மக்களின் எண்ணங்களையும் பூர்த்தி செய்யும் அரசாக திகழ்கிறது தமிழக அரசு என்றார் ஓ.எஸ். மணியன்.
தம்பிரான்குடி, கள்ளர்காடு, வைரவன்காடு, இறையான்குடி, எட்டுக்குடி, உரங்குடி ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டடங்கள், சோழவித்யாபுரம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையக் கட்டடம், பாலக்குறிச்சி ஊராட்சி அலுவலகக் கட்டடம் என ரூ. 83.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டங்களை அமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில், 13 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 15 லட்சம் கடனுதவிகளையும், மாற்றுத் திறனாளிகள் 2 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் மதிப்பில் கடனுதவி உத்தரவுகளையும், 99 பேருக்கு ரூ. 32.17 லட்சம் மதிப்பில் விவசாயக் கடனுதவிகளையும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வ. முருகேசன் தலைமை வகித்தார். நாகை மக்களவை தொகுதி உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் கனகசபாபதி, வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதிமணி, பாஸ்கரன், வட்டாட்சியர் தையல்நாயகி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com