தான்படித்த பள்ளிக்கு பொலிவுறு வகுப்பறையை ஏற்படுத்திய பொறியாளர்..!

திருக்குவளை அருகே உள்ள வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர், தான் படித்த பள்ளிக்கு சுமார் ரூ.1.15 லட்சம் மதிப்பில் பொலிவுறு வகுப்பறை (ஸ்மார்ட் க்ளாஸ்)


திருக்குவளை அருகே உள்ள வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர், தான் படித்த பள்ளிக்கு சுமார் ரூ.1.15 லட்சம் மதிப்பில் பொலிவுறு வகுப்பறை (ஸ்மார்ட் க்ளாஸ்) வசதியை அமைத்துக் கொடுத்திருப்பது பெற்றோர்களிடையேநெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
வலிவலத்தில் பல ஆண்டுகளாக வருவாய்த்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் சடகோபன். அடிப்படையில் சமூக ஆர்வலரான இவர், தனது மகன் ச. கோகுல கிருஷ்ணனை தான் பயின்ற வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்த்தார். பின்னர் பொறியியல் பட்டதாரியாக உயர்ந்த கோகுல கிருஷ்ணன், தற்போது பஹ்ரைன் நாட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். 
ஆண்டுக்கு ஒருமுறை விடுமுறையில் தன்னுடைய சொந்த ஊருக்கு வரும் இவர், தான் ஆரம்பக் கல்வி பயின்ற வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குச் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். அந்த வகையில், மாணவர்களுக்குத் தேவையான எழுதுபொருள்கள் மற்றும் நோட்டு ஆகியவற்றை இலவசமாக வழங்கி அவர்களை உற்சாகப்படுத்துவார். 
இம்முறை சொந்த ஊர் வந்த இவர், பள்ளிக்குச் சென்று பார்த்தபோது அங்கு கட்டமைப்பில் மாறுபாடு நிகழ்ந்த வண்ணம் இருந்தது. அதேவேளையில், பள்ளியில் பொலிவுறு வகுப்பறை இல்லாததை உணர்ந்த அவர், அதற்கான திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக தலைமை ஆசிரியரிடம் ஒப்புதல் பெற்றுள்ளார்.
தொடர்ந்து, மேலை நாடுகளில் இருப்பது போல் சுமார் ரூ.1.15 லட்சம் மதிப்பீட்டில், பள்ளிக்கு திறன் வகுப்பறை அமைத்து தந்துள்ளார். அவரை தலைமை ஆசிரியர் சி. முரளி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மட்டுமல்லாமல் கிராம மக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினர்.
இதுகுறித்து கோகுல கிருஷ்ணன் கூறியதாவது:
ஒவ்வோர் ஆண்டும் விடுமுறையின்போது நான் படித்த பள்ளிக்கு வருவது என்னுடைய வழக்கம். இதேபோல்,  இந்த ஆண்டும் இப்பள்ளிக்கு வந்து மாணவ-மாணவிகளை சந்தித்தேன். அப்போது ஆசிரியர் ஒருவர் தனது செல்லிடப்பேசி மூலம் மாணவர்களுக்கு புரியும் வகையில் விடியோ வாயிலாக பாடம் நடத்தியதை பார்த்தேன். அப்போது, கடைசி வரிசையில் அமர்ந்திருந்த மாணவர்கள் பலர் அந்த விடியோ தெளிவாக தெரியாமல் தவித்தனர். 
இதைப் பார்த்த எனக்கு மாணவர்கள் செளகரியமாக அமர்ந்து படிக்கும் வண்ணம் அகன்ற திரை, அதாவது ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை அமைத்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆகையால், தலைமை ஆசிரியரின் ஒப்புதலோடு அதை ஏற்படுத்திக் கொடுத்தேன்.
 மாணவர்கள் சுதந்திரமான முறையில் செளகரியமாக அமர்ந்து படிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த வசதி, சுதந்திர தினத்தன்று எனது தந்தை மூலமாக திறந்து வைக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இந்நிகழ்வு எனக்கு மட்டுமல்லாமல் நான் படித்த இந்த பள்ளிக்கும் பெருமை சேர்க்கிறது என மகிழ்ச்சி பொங்க கூறினார். 
தலைமை ஆசிரியர் முரளி கூறியதாவது:
பொலிவுறு வகுப்பறைகள் வாயிலாக கல்வி மீதான ஆர்வத்தை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்க முடியும். படங்களைக் காட்டி, அவற்றின் பெயர்களைக் கூறச் செய்தல், மனப்பாடப் பகுதிகளை ராகத்துடன் பாடும் விடியோக்களைப் பார்க்கச் செய்தல் என பல்வேறு வகைகளில் பொலிவுறு வகுப்பறை பயன்படும்.
வழக்கமான முறையில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது வகுப்பறையிலுள்ள அனைத்து மாணவர்களையும் ஈர்க்க முடியாமல் போய்விடக்கூடும். ஆனால், திரைவழியே கற்பிக்கும்போது அது சாத்தியமாகும். மேலும் தான் படித்த பள்ளிக்காக தன் சொந்த செலவில் மாணவர்களின் நலனுக்காக அமைத்து தரப்பட்ட இந்த பொலிவுறு வகுப்பறையின் மூலம் ஏராளமான மாணவர்கள்
பயன்பெறுவர் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com