வைக்கோல் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

திருக்குவளை பகுதிகளில்  வைக்கோல் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், சம்பா அறுவடை செய்துவரும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

திருக்குவளை பகுதிகளில்  வைக்கோல் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், சம்பா அறுவடை செய்துவரும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கஜா புயல், தண்ணீர் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் நிகழாண்டு சம்பா மகசூல் எதிர்பார்த்த அளவில் இல்லை. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை வைக்கோலை விற்று ஓரளவுக்கு ஈடு செய்யலாம் என திட்டமிட்ட விவசாயிகளுக்கு வைக்கோல் விலை வீழ்ச்சி கவலையை ஏற்படுத்தியுள்ளது. 
கடந்த ஆண்டு சம்பா அறுவடையின் போது, வைக்கோல் கட்டு ஒன்று ரூ. 150 முதல் 180 வரை விற்பனையான நிலையில், நிகழாண்டு சம்பா அறுவடை பருவத்தில் ரூ. 90 முதல் ரூ. 120 வரை மட்டுமே விற்பனையாகிறது.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியது:
அறுவடை செய்த பின்னர், நிலத்தில் கிடக்கும் வைக்கோல்களை இயந்திரம் மூலம் கட்டுகளாகக் கட்ட ஒரு கட்டுக்கு ரூ. 30 செலவாகிறது. எனவே, செலவுபோக மீதி ரூ. 60 முதல் ரூ.90 வரை வைக்கோலின் தரத்துக்கேற்ப விலை கிடைக்கிறது.
தற்போது, கால்நடை வளர்ப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதால், கிராமப் புறங்களில் வைக்கோலின் தேவையும் குறைந்து வருகிறது. எனவே திருப்பூர், சேலம், ஈரோடு போன்ற பகுதிகளில் உள்ள காகிதம் மற்றும் அட்டை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு வைக்கோல்களை விற்பனை செய்கிறோம். அங்கிருந்து வரும் வியாபாரிகள் போக்குவரத்து செலவை கணக்கில் கொண்டு, வைக்கோல் கட்டுக்கு ரூ. 50 முதல் ரூ. 70 வரை மட்டுமே தருகின்றனர்.
இதனால், எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை. அத்துடன், தேவை குறைந்துவருவதால், சில இடங்களில் வைக்கோல் கட்டுகள் விற்கப்படாமல் வயல்வெளிகளிலேயே தேங்கியுள்ளன என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com