ஆதிதிராவிடர் நலத் துறை மூலம் ரூ.3.25 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் தகவல்

நாகை மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத் துறை மூலம் ரூ. 3.25 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட

நாகை மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத் துறை மூலம் ரூ. 3.25 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது : 
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமூகப் பிரிவிலிருந்தும், பொருளாதார நெருக்கடியிலிருந்தும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களை மீட்கும் வகையில் கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களுடன், பொருளாதார நிலையின் துரித மேம்பாட்டுக்கும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 
நாகை மாவட்டத்தில் 2017-18-ஆம் ஆண்டில் ஆதிதிராவிடர் நலத் துறையின் வன்கொடுமை தீருதவி வழங்கும் திட்டத்தின்கீழ் 41 வழக்குகளில் தொடர்புடைய 86 பயனாளிகளுக்கு ரூ. 1.14 கோடி மதிப்பில் தீருதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. சலவைத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர் 5 பேருக்குத் தலா ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான சலவைப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் 2 பள்ளிகளில் ரூ. 2.61 லட்சம் மதிப்பிலும், 12 விடுதிகளில் ரூ. 10.2 லட்சம் மதிப்பிலும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்குக் கல்வி உதவித் தொகை மற்றும் பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகையாக ரூ. 10 கோடி என மொத்தம் ரூ. 3.25 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையில் இயங்கும் பள்ளிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் 2 இணை சீருடைகளும், விலையில்லா புத்தகப்பைகள், காலணிகள், பென்சில்கள், உபகரணப் பெட்டிகள், நிலவரைப் படங்கள் ஆகியனவும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு பிரிமெட்ரிக் கல்வி உதவித் தொகையும், 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புப் பயிலும் மாணவ, மாணவியருக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகையும் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. 
ஆதிதிராவிடர் துணை திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் சிறப்பு மத்திய நிதி உதவியிலிருந்து அனைத்துத் துறைகளும், தங்கள் துறையின் முறையான திட்டங்களுடன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் நலனுக்காக  குறியீடு நிர்ணயித்து தமிழக அரசு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் துரிதமான சமூக, பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கி சட்டத் துணை கொண்டு, பல்வேறு வகையான திட்டங்களைத் தீட்டி, செயல்படுத்துவதற்குத் தேவையான கொள்கை திட்டங்களை உருவாக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com