வறுமையில் வாடும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 மாற்றுத் திறனாளிகள்: கைதூக்கிவிடுமா அரசு?

குடும்பத்தில் ஒரு குழந்தை மாற்றுத் திறனாளியாக பிறந்து விட்டாலே, அந்த குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துவிடும்.

குடும்பத்தில் ஒரு குழந்தை மாற்றுத் திறனாளியாக பிறந்து விட்டாலே, அந்த குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துவிடும். ஆனால், குடும்பத்தில் 6 பேருமே மாற்றுத் திறனாளியாக பிறந்து வாழ்ந்து வருவது வேதனையிலும் வேதனையானது.
நாகை மாவட்டம், குத்தாலம் வட்டம், திருமணஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் 3 அடி உயரமே உடைய மாற்றுத் திறனாளி முரளி (53). இவர் மட்டுமன்றி இவரது குடும்பத்தில் உள்ள அனைவருமே மாற்றுத் திறனாளிகள் என்பது உள்ளத்தை உருக வைப்பதாக உள்ளது. இவரது சகோதரர் ரகு (48) 4 அடி உயரமும்,  சகோதரி லெட்சுமி(45) 4 அடிக்கு சற்று குறைவாகவும், இளைய சகோதரர் பாலாஜி (35) 3 அடி உயரமும் கொண்ட மாற்றுத் திறனாளிகள். இவர்களது தாயார் வசந்தாவும் (73),  சிறு வயது முதல் இக்குடும்பத்திலேயே வசித்து வரும் வசந்தாவின் சகோதரி லெட்சுமி (60) என்பவரும் காது கேட்காத,  வாய்ப் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் ஆவர். முரளியின் தந்தை நாராயணன், திருமணஞ்சேரியில் உள்ள பெருமாள் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றியவர். நல்ல உடல் தகுதியுடன் இருந்த இவர், காது கேட்காத, வாய்ப் பேச முடியாத  தனது அக்காள் மகள் வசந்தாவை 55 ஆண்டுகளுக்கு முன்பு கருணை உள்ளத்தோடு திருமணம் செய்து கொண்டார். மேலும், வசந்தாவின் சகோதரி லெட்சுமியையும் தன் குடும்பத்தில் சேர்த்துக்கொண்டார்.
கருணை உள்ளம் கொண்ட நாராயணனின் வாழ்க்கையில் இயற்கை கருணை காட்டவில்லை.  4 குழந்தைகளுமே மாற்றுத் திறனாளிகளாக பிறந்தது நாராயணனின் வாழ்க்கையில் தீராத சோகத்தை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும், தான் வாழ்ந்த வரையில் தனது குடும்பம், வறுமையின் கோரப்பிடியில் சிக்காமல், கண்ணை இமை காப்பதுபோல் காப்பாற்றி வந்தார் நாராயணன். மேலும், தனது ஒரே பெண்ணான லெட்சுமிக்கும் திருமணம் செய்து வைத்தார். 2001 -ஆம் ஆண்டு நாராயணன் இறந்த பிறகு திக்குத்தெரியாத காட்டில் விட்டதுபோன்று தனித்து விடப்பட்டது அவரது குடும்பம். தன் தந்தை சேர்த்து வைத்திருந்த சொத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக விற்று தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்த குடும்பத்தின் தலைமகனான முரளி, தந்தையின் மரணத்துக்குப் பிறகு செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.
இக்குடும்பத்தில் வசிக்கும் 5 பேருக்கும், வருவாய்த்துறை சார்பில் தலா ரூ. 1,000 வீதம் வழங்கப்பட்டு வந்த ஊனமுற்றோர் உதவித்தொகை ரூ. 5 ஆயிரத்தை  வைத்துதான் அவர்கள் குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், சோதனை மேல் சோதனையாக, பாலாஜி நடத்தி வந்த மாற்றுத் திறனாளிகள் சுய உதவிக் குழுவில் இருந்த உறுப்பினர்கள் சிலர் சரிவர பணம் செலுத்தாத காரணத்தால், அந்தக் கடன் நிலுவைத் தொகைக்காக சுய உதவிக் குழுவின் தலைவரான பாலாஜி மற்றும் உறுப்பினர்கள் வசந்தா, லெட்சுமி ஆகிய 3 பேரின் மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகையை 6 மாதங்களாக நிறுத்தி வைத்துள்ளது வங்கி நிர்வாகம். உதவித்தொகையை வைத்துக் குறைந்தபட்சம் இரண்டு வேளை உணவாவது உண்டு வந்த இக்குடும்பத்தினர், உதவித் தொகை நிறுத்தப்பட்டதால் தற்போது ஒருவேளை உணவுக்கே சிரமப்படும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
மனித உரிமை ஆணையத்தின்  மனிதநேயம்...
இக்குடும்பத்தினரின் அவல நிலை குறித்து  தகவல் அறிந்த மாநில மனித உரிமை ஆணையம், கடந்த 3-ஆம் தேதி தானாக முன்வந்து, ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், இதுகுறித்து வரும் 4 வாரங்களுக்குள் மாவட்ட நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மனித உரிமை ஆணையம் மனிதநேயத்துடன் பிறப்பித்த இந்த உத்தரவு, பாலாஜி குடும்பத்தினருக்குத் தடைபட்ட உதவித் தொகை மீண்டும் கிடைக்கும் வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது. தற்போதைய நிலையில்,  ரகு மட்டும் சிறு, சிறு வேலைகளை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வரும் நிலையில்,  சகோதரர்கள் 3 பேரும் பத்தாம் வகுப்பு படித்துள்ளனர். தங்களில் யாரேனும் ஒருவருக்காவது அரசு பணி வாய்ப்பு வழங்கினால்  தங்கள் குடும்பம் தலைநிமிர்ந்துவிடும் என்ற ஏக்கக் கனவுடன் உள்ளனர் இந்தமாற்றுத்திறனாளி குடும்பத்தினர். இவர்களின் ஏக்கக் கனவை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com