தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாகை மாவட்டம், திருக்குவளையில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என சுற்றுவட்டாரப் பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை மாவட்டம், திருக்குவளையில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என சுற்றுவட்டாரப் பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம், திருக்குவளை வட்டத்தில் 35 வருவாய் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். திருக்குவளையில் வட்டாட்சியர் அலுவலகம், நூலகம், துணை மின் நிலையம் உள்ளிட்ட அமைப்புகள் இருந்தாலும், அவசியத் தேவையான தீயணைப்பு நிலையம் இல்லாததை திருக்குவளை பகுதி மக்கள் பெரும் குறையாகக் கருதுகின்றனர். 
திருக்குவளை பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டால் கீழ்வேளூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, தலைஞாயிறு  ஆகிய பகுதிகளில் இருந்துதான் விபத்தின் தன்மைக்கேற்ற ஒரு தீயணைப்பு வாகனமோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களோ வரவேண்டியுள்ளது. இதனால், பெரும்பாலும் தீ விபத்துக்குள்ளாகும் இடம் முற்றிலும் சேதமடைந்துவிடுகிறது.
 திருக்குவளையிலிருந்து கீழ்வேளூர் சுமார் 15 கி.மீ. தொலைவிலும், வேளாங்கண்ணி 19 கி.மீ. தொலைவிலும், தலைஞாயிற்று 10 கி.மீ. தொலைவிலும், நாகை  சுமார் 25 கி.மீ. தொலைவிலும் உள்ளதால் இப்பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு காலதாமதமாகிறது. குறிப்பாக, கீழ்வேளூரிலிருந்து ரயில்வே கடவுப் பாதையைக் கடந்துதான் வரவேண்டும். அப்போது, ரயிலுக்காக கடவுப்பாதை அடைக்கப்பட்டிருந்தால், தீயணைப்பு வாகனம் வந்து சேர்வதற்குள் தீ விபத்துக்குள்ளான இடம் முற்றிலும் எரிந்து நாசமாகிவிடும்.
தீயணைப்பு நிலையத்துக்கான அவசியம்: திருக்குவளைப் பகுதியில் கால்நடைகள் அதிக அளவில் வளர்க்கப்படுவதால், கிராமப் பகுதிகளில் வைக்கோல் போர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இவற்றில் தீப்பற்றினால் அணைப்பது எளிதன்று. காற்றினால் தீ பரவி அருகில் உள்ள கூரை வீடுகளும் தீக்கிரையாகும் அபாயம் உள்ளது. இவ்வாறான விபத்தும் சில நேரங்களில் நிகழ்ந்துள்ளது. கடந்த ஒராண்டுக்கு முன்பு கருங்கண்ணி மாதா கோயில் அருகே வைக்கோல் போர் தீப்பற்றியதில் காற்றினால் சாட்டியக்குடி, பெரிய காருக்குடி மற்றும் எட்டுக்குடி பகுதிக்கு தீ பரவி கூரை வீடுகள்
தீக்கிரையாகின. இதேபோல், திருக்குவளையிலிருந்து எட்டுக்குடி செல்லும் சாலையில் தனியார் சமையல் எரிவாயு குடோன் உள்ளது. இதனால், இப்பகுதிக்கு தீயணைப்பு நிலையம் என்பது இன்றியமையாத தேவையாகும்.
எனவே, திருக்குவளை வட்டத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டால் இப்பகுதி மக்களுக்கு பெரிதும் உதவியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, திருக்குவளையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கூறியது:
மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதி பிறந்த திருக்குவளையில் பல வசதிகள் இருந்தாலும், தீயணைப்பு நிலையம் இல்லாதது இப்பகுதி மக்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. விபத்துகள் நேரிடும் பட்சத்தில் இப்பகுதியில் வசிக்கும் நாங்கள் அருகாமையில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வருவதற்குள், பாதிப்பு பெரிய அளவில் ஏற்பட்டுவிடுகிறது. ஆகவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி திருக்குவளையில் தீயணைப்பு நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com