மாணவர்களோ சாதனையில்; பள்ளியோ பரிதாபத்தில்..!

வகுப்பறைகள், ஆய்வகம், நூலகம், குடிநீர், கழிவறைகள், விளையாட்டு மைதானம், உள்ளிட்ட அடிப்படை வசதிகள்
மாணவர்களோ சாதனையில்; பள்ளியோ பரிதாபத்தில்..!

வகுப்பறைகள், ஆய்வகம், நூலகம், குடிநீர், கழிவறைகள், விளையாட்டு மைதானம், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் கடந்த 5 ஆண்டுகளாக 90 சதவீத தேர்ச்சிப் பெற்று ஓசையே இன்றி சாதனை படைத்துள்ளது ஓர் அரசுப் பள்ளி.
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியத்துக்கு உள்பட்டது திருக்கண்ணபுரம். இவ்வூரில் கடந்த 1901-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசுப் பள்ளி, 1981-இல் உயர்நிலைப் பள்ளியாகவும், 2006-இல் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் திருக்கண்ணபுரம், திருப்புகலூர், பெருநாட்டான்தோப்பு, வவ்வாலடி, புதுக்கடை, திருச்செங்காட்டாங்குடி, பில்லாளி, தென்னைமரக்குடி, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 550- க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் போதிய கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்களின் கற்றலும், ஆசிரியர்களின் கற்பித்தலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மாணவர்களுக்கு போதிய குடிநீர் வசதிகளும் செய்து தரப்படவில்லை. இப்பள்ளியின் வளாகத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் பழுதடைந்து பயனற்ற நிலையில் உள்ளது. மேலும் மாணவர்கள் தங்களது சைக்கிள்களை நிறுத்துவதற்கு சைக்கிள் ஸ்டாண்ட் வசதியும், சுற்றுச்சுவரும் கூட இல்லை.விளையாட்டு மைதானம் இல்லாத போதிலும், தற்போது நாகை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற குறுவட்ட விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட 36 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர் இப்பள்ளி மாணவர்கள்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் இல்லாத நிலையிலும், கடந்த 5 ஆண்டுகளாக 12 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 90 சதவீத தேர்ச்சியைப் பெற்று சாதனை படைத்துள்ளது திருக்கண்ணபுரம்  அரசுப் பள்ளி.
எனவே கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படாத வகையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் இப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்குத் தேவையான வகுப்பறை கட்டடங்களைக் கட்டுவதற்கும், அடிப்படை வசதிகளை செய்துத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இக்கிராம மக்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் என்.எஸ். தியாகராஜன் கூறியதாவது: 
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட இப்பள்ளியில், போதுமான கட்டடங்கள் இல்லாத நிலை நீடிக்கிறது. விளையாட்டு மைதானம், சைக்கிள் நிறுத்தம், சுற்றுச்சுவர் போன்ற அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. போதுமானஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வித் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது என்றார். 
பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் அன்பானந்தம் கூறியதாவது: 
 இப்பள்ளி இருக்குமிடம் சௌரிராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமானது. பள்ளியின் அருகே விளையாட்டு மைதானத்திற்குத் தேவையான இடம் உள்ளது. பலமுறை கோயில் நிர்வாகத்திடமும், அறநிலையத் துறையிடமும், சட்டப் பேரவை உறுப்பினரிடமும் எழுத்துபூர்வமாக கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.
மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மறைந்த "துக்ளக்' ஆசிரியர் சோ. ராமசாமியால் வழங்கப்பட்ட நிதியில், கட்டப்பட்ட சுற்றுச்சுவர் தற்போது சேதமடைந்து விழுந்து விட்டது. அதைக் கட்டுவதற்காவது சட்டப் பேரவை, மக்களவை உறுப்பினர்கள் நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com