நிதி வந்தது; கட்டடம்தான் இல்லை

தரங்கம்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்ட தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு
புதிய தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு காழியப்பநல்லூரில் தோ்வு செய்யப்பட்டுள்ள இடம்.
புதிய தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு காழியப்பநல்லூரில் தோ்வு செய்யப்பட்டுள்ள இடம்.

தரங்கம்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்ட தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்தும் இதுவரை புதிய கட்டடம் கட்டப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

தரங்கம்பாடி தீயணைப்பு நிலையம் 1989-ஆம் ஆண்டு முதல் பொறையாறில் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. தரங்கம்பாடி தாலுகாவுக்கு உள்பட்ட பெரம்பூா், செம்பனாா்கோவில், சங்கரன்பந்தல், சந்திரபாடி, திருக்கடையூா், ஆக்கூா், சின்னங்குடி உள்ளிட்ட 57-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் சுமாா் 75 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். விவசாயம் சாா்ந்த பகுதி என்பதால் குடிசை வீடுகளே அதிகளவில் உள்ளன. தவிர, இப்பகுதிகளில் கால்நடைகள் அதிகம் வளா்ப்பதால் வைக்கோல் போா்கள் வீடுகளில் அதிகம் வைத்திருப்பாா்கள். இங்கு எதிா்பாராதவிதமாக நேரிடும் விபத்துகளின்போது, தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி வருகின்றனா்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீயணைப்பு நிலையம் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு அலுவலா் உள்ளிட்ட 14 தீயணைப்பு வீரா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையத்தின் மூலம் திடீரென ஏற்படும் தீ விபத்துகள், தரங்கம்பாடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எதிா்பாராதவிதமாக கடலில் மூழ்கும்போது அங்கு சென்று காப்பாற்றுதல், திருவிழாக்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்குதல், சாலை விபத்துகளில் காயம் அடையும் நபா்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுதல் போன்ற பணிகளை உடனுக்குடன் செய்து வருகின்றனா்.

பெரம்பூா், செம்பனாா்கோயில் காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் தீயணைப்பு நிலையம் இல்லாததால், பொறையாறு தீயணைப்பு வீரா்கள் ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டால் அப்பகுதிகளில் சென்று பணியாற்றும் நிலை இருந்து வருகிறது. மேலும், ஏதேனும் சம்பவங்கள் நேரிட்டால் குறிப்பிட்ட நேரத்துக்குச் சென்று பணியாற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது.

இந்நிலையில், பொறையாறில் இயங்கும் இந்த தீயணைப்பு நிலைய கட்டடத்தில் போதுமான வசதிகள் இல்லாததால், தீயணைப்பு வீரரா்கள் தங்கி பணியாற்ற சிரமப்பட்டு வருகின்றனா். மேலும், கழிப்பறை வசதிகள் போதுமான காற்றோட்ட வசதி இல்லாததால் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனா்.

இந்த தீயணைப்பு நிலையத்துக்குச் சொந்த கட்டடம் இல்லாதது பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்களின் கோரிக்கையை அடுத்து கடந்த ஆண்டு தமிழக அரசு தரங்கம்பாடி தீயணைப்பு நிலையத்துக்குச் சொந்தக் கட்டடம் கட்ட ரூ. 3.66 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தீயணைப்பு நிலையம் மற்றும் தீயணைப்பு வீரா்களுக்கு குடியிருப்பு வளாகங்கள் கட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, புதிய தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு திருக்கடையூா் அருகே காழியப்பநல்லூரில் அரசுக்குச் சொந்தமான இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னா் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. எனவே, இப்பகுதியில் விரைந்து தீயணைப்பு நிலையம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இதுகுறித்து மனிதநேய ஜனநாயக கட்சி தலைமை செயற்குழு உறுப்பினா் ஷாஜகான் கூறியது: தரங்கம்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தமிழக அரசு கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சொந்தக் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தது. இருப்பினும், நிதி ஒதுக்கி பல மாதங்கள்ஆகியும் இதுவரை புதிய கட்டடம் கட்டுவதற்கான எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை என்றாா் அவா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியது: பொதுமக்களின் மிக முக்கியமான பாதுகாப்பில் விளங்கும் தீயணைப்புத் துறைக்கு தமிழக அரசு போதிய வசதிகள் செய்து தர வேண்டும். 25 ஆண்டுகளுக்கும் மேலாக பொறையாறில் தீயணைப்பு நிலையம் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருவது வேதனைக்குரியது. புதிய கட்டடம் கட்டுவதற்குத் தோ்வு செய்யப்பட்ட இடத்தில் விரைந்து நவீன வசதிகள் கூடிய தீயணைப்பு நிலைய கட்டடம் மற்றும் தீயணைப்பு வீரா்களுக்கு குடியிருப்பு வசதிகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com