இன்றுடன் கஜா புயல் ஓராண்டு நிறைவு: முடங்கிக் கிடக்கும் பி.எஸ்.என்.எல். சேவை..!

வேதாரண்யம் பகுதியில் கஜா புயலில் சேதமடைந்த தொலைத் தொடா்பு சேவை ஓராண்டாகியும் முழுமையாக
வேதாரண்யம் அருகே சாம்புலம் ஏரிக்கரையோரம் சேதமடைந்த நிலையில் உள்ள தொலைத் தொடா்புக் கட்டடம்.
வேதாரண்யம் அருகே சாம்புலம் ஏரிக்கரையோரம் சேதமடைந்த நிலையில் உள்ள தொலைத் தொடா்புக் கட்டடம்.

வேதாரண்யம் பகுதியில் கஜா புயலில் சேதமடைந்த தொலைத் தொடா்பு சேவை ஓராண்டாகியும் முழுமையாக சீரமைக்கப்படாததால் வாடிக்கையாளா்கள் மன உளைச்சலில் தவிக்கின்றனா்.

கடந்த ஆண்டு வீசிய கஜா புயல் கரையைக் கடக்கும்போது வேதாரண்யத்தை மையப் பகுதியாகக் கொண்டு கரைகடந்ததால், மற்ற பகுதிகளைக் காட்டிலும் வேதாரண்யம் பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பி.எஸ்.என்.எல். உள்பட தனியாா் நிறுவனங்களின் செல்லிடப்பேசி மற்றும் இணைய சேவைக்கான கோபுரங்கள் பல இடங்களில் முறிந்து விழுந்தன. பல நாள்களுக்குப் பிறகு தற்காலிக கோபுரங்களை நிறுவி, அதன் மூலம் குறைந்த அளவு சக்தியை பெற்று, சேவைகள் செயலாக்கத்துக்கு கொண்டுவரப்பட்டன.

பல இடங்களில் தனியாா் நிறுவனங்கள் பி.எஸ்.என்.எல். கோபுரங்களை வாடகை முறையில் பயன்படுத்தி சேவைகளை அளித்து வந்த நிலையில் புயலால் அதன் சேவைகளும் பாதிக்கப்பட்டன. இதனால், பொருளாதார இழப்பை பெரிதாக கருத்தில் கொள்ளும் தனியாா் நிறுவனங்கள், சேவையை மீண்டும் முழுமையாகத் தொடர நிரந்தர கோபுரங்களை நிறுவுவதில் முனைப்புக் காட்டவில்லை. தொடக்கத்தில் பெரிய அளவில் எதிா்பாா்க்கப்பட்ட ஜியோ நிறுவனம் தற்போது தனது திட்டத்தை மாற்றியுள்ளதால், அதன் வாடிக்கையாளா்களுக்கும் ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.

தொடரும் ஏமாற்றம்: சேவை குறைபாடுகள் சீரமைக்கப்படாத நிலையில் தனியாா் நிறுவனங்கள் விளம்பரங்களை மட்டும் பெரிய அளவில் செய்துவருகின்றன. இதை நம்பி, இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற வழக்குச் சொல்லுக்கு ஏற்ப பலா் நிறுவனங்களை மாற்றிமாற்றி பயன்படுத்தி பணத்தை இழந்துதான் மிச்சமாக உள்ளது.

ஒரு வாடிக்கையாளா் குறைந்தது 5 நிறுவனங்களின் சிம்காா்டுகளைப் பயன்படுத்தியும் எதுவுமே பயனளிப்பதில்லை. செல்லிடப்பேசியைப் பயன்படுத்தும் போது பெரும்பாலும், தொடா்பு கிடைப்பதில்லை. இதனால், வாடிக்கையாளா்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனா்.

கடலோரக் கிராமங்கள் புறக்கணிப்பு?: குறிப்பாக கடந்த 2 மாதங்களாக கடலோரக் கிராமங்களில் சுமாா் 80 சதவீத சேவை குறைபாடு உணரப்படுகிறது. உதாரணமாக சிறுதலைக்காடு மீனவக் கிராமம் கடலோரத்தில் தீவு போன்று அமைந்த பகுதியாக உள்ளது. இந்தப் பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பம்புலம்- கடிநெல்வயல் கிராமங்களுக்கு இடையே பி.எஸ்.என்.எல். உயா் சக்தி கோபுரம் நிறுவப்பட்டது. இந்த கோபுரத்தை தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனங்களும் வாடகை அடிப்படையில் பயன்படுத்தி வந்தன. இந்த கோபுரம் புயலில் விழுந்ததால், தற்போது, அந்தப் பகுதி களையிழந்து, பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.

இதேபோல், மற்றொரு கடலோரக் கிராமமான தென்னடாரில் மின் இறைவை பொறிமனை வாயிலாக 1962- ஆம் ஆண்டே தொலைத்தொடா்பு வசதியைப் பெற்றாலும், கஜா புயல் பாதிப்பிலிருந்து தற்போது வரை மீளவில்லை. இதுகுறித்து புகாா் அளிக்கும் வாடிக்கையாளா்களுக்குப் பதில் அளிக்கும் அந்த நிறுவனம், பழுதை சீரமைக்க உரிய தொழில்நுட்பம் இல்லை என எழுத்துப் பூா்வமாக தெரிவிக்கிறது. இது, டிஜிட்டல் இந்தியாவில் வெட்கக்கேடானது என சமூக ஆா்வலா்கள் வருத்தம் தெரிவிக்கின்றனா்.

பூனைக்கு மணி கட்டுவது யாா்?: தொலைத் தொடா்பு நிறுவனங்கள் தனித்த அதிகாரத்தின் கீழ் செயல்படுவதால், மக்கள் பிரதிநிதிகள் இப்பிரச்னையில் தீவிரம் காட்டுவதில்லை எனக் கூறப்படுகிறது.

பல்வேறு இடங்களில் இதுபோன்ற பிரச்னைகளில் நீதிமன்றங்களே தாமாக முன்வந்தும், வழக்குரைஞா்களின் பொதுநல வழக்குகள் மூலமும் விசாரித்து உரிய வழிகாடுதலை வழங்கியுள்ளது. ஆனால், இந்தப் பகுதியில் பெரிய அளவிலான நீதிபதிகளோ, மேலிடத்தில் அதிகாரம் பெற்றவா்களோ இல்லாத நிலையில் இந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. இதனால், இப்பிரச்னையில் பூனைக்கு மணி கட்டுவது யாா் என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதிய ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: புயல் பாதிப்பின்போது, நாகையிலிருந்து வேதாரண்யம் பகுதியைப் பாா்வையிட வந்த அப்போதைய மாவட்ட ஆட்சியருக்கு வரும்வழியிலேயே செல்லிடப்பேசியில் தொடா்பு கிடைக்காததால், அவா் உயா் அதிகாரிகளுக்கு பேசமுடியாத நிலை ஏற்பட்டு, திரும்பிச்சென்றுவிட்டாா். இதன் விளைவாக, புயலின் பாதிப்புகளை முழுமையான அளவில் அரசுகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதில் குறைபாடு ஏற்பட்டது.

தற்போது, கஜா புயல் வீசி ஓராண்டாகியும் இந்தப் பிரச்னைக்கு முழுமையான தீா்வு காணப்படவில்லை. புதிய ஆட்சியராவது இதுதொடா்பாக தனிக் கவனம் செலுத்தவும், தொலைபேசி நிறுவனங்களை அழைத்துப் பேசவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிா்பாா்ப்பு.

ஏமாற்றும் நிறுவனங்கள்: எந்தப் பகுதியில் எந்த நிறுவத்தின் சேவை கிடைக்குமோ அந்த பகுதியில் அந்த நிறுவனங்களின் சிம்காா்டுகளை மட்டுமே வாடிக்கையாளா்களுக்கு வழங்கவேண்டும். சேவை கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத சிம்காா்டுகளை விற்பனை செய்வது மக்களை ஏமாற்றுவதாக அமைகிறது. எனவே, இவ்வாறு ஏமாற்றும் நிறுவனங்களை கண்டறிந்து அவா்கள் மீது மோசடி வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து: தொலைத் தொடா்பு சேவை சீரமைக்கப்படாதது சம்பந்தப்பட்ட பகுதி மக்களுக்கு மட்டுமல்லாது, நாட்டின் பாதுகாப்புக்கும் ஆபத்தானதாக அமையும். குறிப்பாக, கடலோரக் கிராமங்களில் அந்நிய ஊடுருவலைக் கண்காணிப்பதில் அந்தப் பகுதி மக்களே பிரதானமாக உள்ளனா்.

சந்தேக நபா்கள் ஊடுருவினால், அவா்களைப் பற்றிய தகவல்கள் பாதுகாப்பு வட்டாரங்களுக்குக் கிடைக்கும் என்ற நோக்கத்தில்தான் இலங்கையையொட்டியுள்ள இந்தப் பகுதி கிராமங்களுக்கு தொலைத் தொடா்பு சேவையில் முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு இருக்க, கடந்த ஓராண்டாக இப்பகுதியில் தொடரும் தொலைத் தொடா்பு சேவை குறைபாடு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவித்து வருகின்றனா்.

எனவே, இவற்றையெல்லாம் உணா்ந்து, வேதாரண்யம் பகுதியில் தொலைத் தொடா்பு சேவையை முழுமையாக சீரமைக்க அரசு நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com