திமுக சார்பில் தூர்வாரிய குளம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

நாகை மாவட்டம், திருக்குவளையில் திமுக சார்பில் தூர்வாரிய குளத்தை திங்கள்கிழமை பொதுமக்களின்

நாகை மாவட்டம், திருக்குவளையில் திமுக சார்பில் தூர்வாரிய குளத்தை திங்கள்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திமுக இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்தார்.  
சென்னையில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளை வத்தமடையான் குளம் தூர்வார நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து, 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள அந்தக் குளம் நாகை தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சோ.பா. மலர்வண்ணன் மேற்பார்வையில் தூர்வாரி பணி முடிக்கப்பட்டது. இந்நிலையில், தூர்வாரிய குளத்தை திமுக இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை பார்வையிட்டு, அங்கு அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டை திறந்து வைத்து அப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்கு குளத்தை கொண்டு வந்தார். தொடர்ந்து, குளத்தில் படிக்கட்டுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.  பின்னர், கருணாநிதி பிறந்த வீட்டில் உள்ள மு. கருணாநிதி, முரசொலிமாறன், அஞ்சுகம் முத்துவேலர் ஆகியோரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக, திருக்குவளை வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில்,  நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் என். கெளதமன், கடடடப் பொறியாளர் சொ. புகழேந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
திருவாசல் குளம் தூர்வாரும் பணி தொடக்கம்...
திருவாரூர், செப். 9: திருவாரூர் அருகே நாரணமங்கலம் குளம் தூர்வாரும் பணியை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் நீர் நிலைகளை மேம்படுத்துவதற்காக, திமுக இளைஞரணி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதனடிப்படையில் குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, திருவாரூர் மாவட்டம், கூடூர் ஊராட்சிக்குள்பட்ட நாரணமங்கலம் பகுதியில் உள்ள திருவாசல் குளம் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, ஜேசிபி இயந்திரத்தை இயக்கி, தூர்வாரும் பணியைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் முன்னிலை வகித்தார்.   பின்னர், உதயநிதி ஸ்டாலின் கூறியது:
திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும், குளங்களை தூர்வாரத் திட்டமிட்டுள்ளோம். இளைஞரணியில், தற்போது நிர்வாகிகளை மாற்றுவதற்கான நடவடிக்கை ஏதும் இல்லை. திமுக இளைஞரணியில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் செப்டம்பர் 14- இல் நடைபெற உள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் டி.ஆர்.பி. ராஜா (மன்னார்குடி), ஆடலரசன் (திருத்துறைப்பூண்டி), உ. மதிவாணன் (கீழ்வேளூர்) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் திருக்குவளைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com