சி.பி.சி.எல். ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டம் ஒத்திவைப்பு

சி.பி.சி.எல் ஒப்பந்தத் தொழிலாளர்களின் குடும்ப அட்டை ஒப்படைப்புப் போராட்டம், தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம் ஆகியன அமைதிப் பேச்சுவார்த்தை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


சி.பி.சி.எல் ஒப்பந்தத் தொழிலாளர்களின் குடும்ப அட்டை ஒப்படைப்புப் போராட்டம், தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம் ஆகியன அமைதிப் பேச்சுவார்த்தை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நாகையை அடுத்த பனங்குடியில் இயங்கும் சி.பி.சி.எல். எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் ஒரு யூனிட்டின் செயல்பாடு அண்மையில் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தக் கிளையை மூட நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. 
இதையடுத்து, இந்த நிறுவனத்தில் 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்புக்கு, சி.பி.சி.எல். நிறுவனம் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கக் கோரி,  மக்களவைத் தேர்தலைப் புறக்கணிப்பதுடன், ஏப்ரல் 16-ஆம் தேதி தங்கள் குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.  இதுகுறித்த அமைதிப் பேச்சுவார்த்தை, பனங்குடி சி.பி.சி.எல். நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நாகை வட்டாட்சியர் இரா. சங்கர், சி.பி.சி.எல். நிறுவன முதன்மைப் பொது மேலாளர் (எச்.ஆர்), முதன்மை பொது மேலாளர் (சி.பி.ஆர்) மற்றும் நிறுவன அலுவலர்கள், காவல் துறையினர், வருவாய்த் துறை அலுவலர்கள், ஒப்பந்தத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், நிர்வாகக் காரணங்களால் ஆலையை மூடும் சூழல் இருந்தாலும், தற்போது அதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலையிழப்புக்கு உள்ளாவதைத் தவிர்ப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து, சி.பி.சி.எல். நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து மே 10-ஆம் தேதிக்குப் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சி.பி.சி.எல். நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com