இன்று வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் விரிவான ஏற்பாடுகள்: ஆட்சியர் தகவல்

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி நாகை மாவட்டத்துக்குள்பட்ட  மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளையும், தஞ்சாவூர் மாவட்டத்துக்குள்பட்ட திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளையும் உள்ளடக்கியது. மொத்தம் 14,84,348 வாக்காளர்களைக் கொண்டது இத்தொகுதி. சட்டப்பேரவைத் தொகுதிவாரியான வாக்காளர்களின் எண்ணிக்கை  : 
சீர்காழி (தனி) : ஆண்கள் - 1,18,297, பெண்கள் - 1,20,847, இதரர் - 9, மொத்தம் - 2,39,153. மயிலாடுதுறை : ஆண்கள் - 1,16,980. பெண்கள் - 1,18,599. இதரர் - 14. மொத்தம் - 2,35,593. பூம்புகார் :  ஆண்கள் - 1,29,600. பெண்கள் - 1,31,260. இதரர் - 3.  மொத்தம் - 2,60,863. திருவிடைமருதூர் (தனி) : ஆண்கள் - 1,21,643. பெண்கள் - 1,22,031. இதரர் - 11. மொத்தம்  - 2,43,685.  கும்பகோணம் : ஆண்கள் - 1,26,674. பெண்கள் - 1,31,504. இதரர் - 4.  மொத்தம் - 2,58,182. பாபநாசம் : ஆண்கள் - 1,21,570. பெண்கள் - 1,25,293. இதரர் - 9. மொத்தம் - 2,46,872. 
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 2,60,863 வாக்காளர்களைக் கொண்ட பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதி அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக  உள்ளது. 2,35,593 வாக்காளர்களைக் கொண்ட மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக உள்ளது. 
வாக்குச் சாவடிகள்...
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குப் பதிவுக்காக 1,738 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை :   சீர்காழி - 288. மயிலாடுதுறை - 266, பூம்புகார் - 306. திருவிடைமருதூர் - 291. கும்பகோணம் - 287. பாபநாசம் - 300. வாக்குச் சாவடி பணிகளில் 7,702 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சீர்காழி தொகுதியில் 1,389 பேரும், மயிலாடுதுறையில் 1,304 பேரும், பூம்புகாரில் 1,485 பேரும், திருவிடைமருதூரில் 1,176 பேரும், கும்பகோணத்தில் 1,148 பேரும், பாபநாசத்தில் 1,200 பேரும் வாக்குச் சாவடி பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஓட்டுநர் உரிமம், வருமான வரி அட்டை , ஆதார் அட்டை உள்பட 11 வகையான ஆவணங்களை ஆதாரமாகக் காட்டி வாக்களிக்கலாம்.  தகுதியான வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்கைப் பதிவு செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
100 சதவீதம்  இலக்கு..
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வாக்குப் பதிவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும், நாகை மாவட்ட ஆட்சியருமான சீ. சுரேஷ்குமார் தெரிவித்தது : 
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வாக்குப் பதிவுக்காக 1,738 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடி மையங்களில் பணியாற்றும் தேர்தல் பணி அலுவலர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டால் அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்ய தொழில்நுட்பப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். 
வாக்குப் பதிவைக் கண்காணிக்கும் வகையில் தேர்தல் பார்வையாளர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாக்குச் சாவடிகளின் பாதுகாப்புப் பணியில் 2 ஆயிரம் காவல் துறையினர் மற்றும் மத்திய ரிசர்வ் படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதைத் தவிர, நகரில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளைக் கண்காணிக்க ரோந்து பணியில் ஈடுபடவும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஆண் மற்றும் பெண் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளி வாக்காளர்கள், சக்கர நாற்காலியில் சென்று வாக்களிக்கும் வகையில் வாக்குச் சாவடிகளில் சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர், மின்சாரம் மற்றும் மருத்துவ வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.  அனைத்து வாக்குச் சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்குப் பதிவு சதவீதம் 100 சதவீத இலக்கை எட்டும் வகையில், வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றார் ஆட்சியர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com