வேதாரண்யத்தில் அபாய நிலையில் கூட்டுக் குடிநீர் திட்ட பிரதானக் குழாய்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே பாலம் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தின் வழியே செல்லும்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே பாலம் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தின் வழியே செல்லும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பிரதான குழாய் பாதை அதன் உறுதித்தன்மையை இழந்து சேதமடைவதால், அவ்வப்போது குடிநீர் ஏற்றும் பணி பாதிக்கப்படுகிறது. இதற்கு நிரந்த தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
வேதாரண்யம் பகுதியில் மாற்றுக் குடிநீர் ஆதாரங்கள் முறையாக பராமரிக்கப்படாத நிலையில், கொள்ளிடம்- வேதாரண்யம் கூட்டுத் திட்ட குடிநீர் விநியோகம் மட்டுமே மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. குறிப்பாக கோடியக்கரை தொடங்கி கடலோர கிராமங்களில் நிலத்தடி நீர்வளம் உவராக மாறிப்போனதால், இப்பகுதி மக்கள் கொள்ளிடம் குடிநீரை மட்டுமே நம்பி இருக்கும் நிலை தவிர்க்க முடியாததாக உணரப்படுகிறது.
வேதாரண்யத்தில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவில் உள்ள வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது, கொள்ளிடம் நீர் ஏற்றும் பொறிமனை. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பராமரிக்கப்படும் இந்த பொறிமனையில் இருந்துதான் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராமப்புறங்கள் மற்றும் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்படுகிறது.
வண்டுவாஞ்சேரி- வேதாரண்யம், கோடியக்கரை வரையில் செல்லும் சுமார் 35 கிமீ பிரதான குழாய் பாதையும் பிரதான சாலையின் பக்கவாட்டிலேயே அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பிரதான சாலையில் பக்கவாட்டில் செல்லும் மானங்கொண்டான் ஆற்றின் குறுக்கே 15-க்கும் மேற்பட்ட இடங்களில் பாலங்கள் கட்டுமானப் பணி அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணியின்போது குழாய்கள் சேதமடைவதும், இதனால் குடிநீர் விநியோகம் பாதிப்புக்குள்ளாவதும் கடந்த 6 மாதங்களாகவே தொடர்கிறது.
இதனால், பொதுவான சூழலில் இயற்கையாக ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டோடு, இதுபோன்று ஏற்படும் செயற்கை தட்டுப்பாடுகளாலும் மக்கள் பாதிக்கப்பட நேரிடுகிறது.
குறிப்பாக, மருதூர் தெற்கு இரட்டைக்கடை வீதியில் மானங்கொண்டான் ஆற்றின் குறுக்கே பஞ்சநதிக்குளம் இணைப்பு பாலம் அமைக்கும் பணி ரூ.2 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த கடைவீதியில் செல்லக்கோண் ஆற்றின் குறுக்கே ஏற்கெனவே மற்றுமொரு உயர்நிலை பாலம் அமைந்துள்ளதால், வண்டுவாஞ்சேரியில் இருந்து சாலையின் பக்கவாட்டில் புதைவழியாக செல்லும் பிரதான குழாய்கள் இந்த இடத்தில் மட்டும் மாறுபட்ட அமைப்பை பெற்றுள்ளன. 
இந்த நிலையில், புதிய பாலம் கட்டுமானத்துக்காக பெரிய அளவில் மண் வெளியேற்றப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள பள்ளத்தின் அருகில் செல்லும் குழாய் திருப்பம் அதன் உறுதித்தன்மையை இழந்தது.
தண்ணீர் வெளியேறும்போது ஏற்படும் அதிவேக அழுத்தத்தை எதிர்கொள்ள முடியாமல், குழாய்களில் அவ்வப்போது உடைப்பு ஏற்படுவதும், அவற்றை கான்கிரீட் கலவைகள், மாற்றுக் குழாய் தகடுகள் போன்றவற்றின் மூலம் ஓட்டைகளை அடைப்பதும்,  அவை சில நாள்களில் மீண்டும் சேதமடைவதும் வாடிக்கையாக மாறி வருகிறது. இதனால், கிராமங்களில் திடீர் திடீரென குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. 
பாலம் கட்டி முடிக்க ஓராண்டு காலமாகும் நிலையில், எந்த நேரத்திலும் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகமுள்ளன. எனவே, சாலையின் பக்கவாட்டில் (வலது பக்கம்) அதாவது பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்படும் பகுதியையொட்டி செல்லும் குழாய் பாதையை பழுதுபார்ப்பதை தவிர்த்து, சாலையின் எதிர் பக்கத்தில் (இடது பக்கமாக) சுமார் நூறு மீட்டர் தொலைவுக்கு மாற்றுப் பாதையை ஏற்படுத்துவதே நிரந்தரமான தீர்வுக்கு வழிவகுக்கும் என்கின்றனர் பொது மக்கள்.
நகராட்சி, 18 ஊராட்சிகள் பாதிப்பு : 
இதேபோல், மருதூர் கடைவீதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் வேதாரண்யம் நகராட்சி பகுதி தவிர, கோடியக்கரை, கோடியக்காடு, கருப்பம்புலம், கடிநெல்வயல், சிறுதலைக்காடு மீனவ கிராமம், பஞ்சநதிக்குளம் 3 சேத்திகள், ஆயக்காரன்புலம் நான்கு சேத்திகள், மருதூர், தகட்டூர், வாய்மேடு, தென்னடார், ஆதனூர், பன்னாள் உள்பட 18 கிராம ஊராட்சிகளுக்கு தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே டேங்கர் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால், தட்டுப்பாடு காலங்களில் திமுகவினர் குடிநீர் விநியோகிப்பதும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தண்ணீர் விநியோகம் தடைபட்டுள்ள கிராமங்களில், பொதுமக்களுக்கு வாந்தி- பேதி பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, உடனடி மாற்று ஏற்பாடாக டேங்கர் லாரிகளில் தண்ணீர் விநியோகத்தை தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  மேலும், போராட்டம் என வீதிக்கு வந்தால் மக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் அதே காவல் துறை, பாதிப்பை உடனடியாக சீரமைக்க தவறிய அரசுத்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
இதனிடையே, கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்ட பிரதான பாதையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதாகக் கூறி, ஆகஸ்ட் 6, 7, 8 ஆகிய நாள்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ள குடிநீர் வடிகால் வாரியம், மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள தொடர்புடைய உள்ளாட்சி நிர்வாகங்ளை கேட்டுக்கொண்டுள்ளது. இதனால், இந்த பகுதியில் குடிநீர் பிரச்னை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com