தூய்மை இந்தியா திட்டம்: வெற்றிக்கொடி நாட்டும் கீழ்வேளூர் பேரூராட்சி!

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 24-ஆவது இடம்பிடித்த நாகை மாவட்டம், கீழ்வேளூர் பேரூராட்சி, தொடர்ந்து

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 24-ஆவது இடம்பிடித்த நாகை மாவட்டம், கீழ்வேளூர் பேரூராட்சி, தொடர்ந்து தூய்மையைப் பேணும் நடவடிக்கையில் முன்னேறி, வெற்றிக் கொடி நாட்டி வருகிறது. 
கடந்த 2014-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ஆம் தேதி தூய்மை இந்தியா திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், தமிழகத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணியில் திருவாரூர், தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் கீழ்வேளூர் பேரூராட்சி முதலிடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு நகரங்களிலும் தூய்மை இந்தியா திட்ட செயல்பாடுகளை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. 
கீழ்வேளூர் பேரூராட்சியானது 4 சதுர கி.மீ. பரப்பளவும், 15 வார்டுகளும், 47 தெருக்களையும் கொண்டது. மேலும், கீழ்வேளூரில் உள்ள 15 வார்டுகளுக்குட்பட்ட வீடுகளில் சேரும் குப்பைகள் அனைத்தும் நீலம், பச்சை என இரு வண்ணக் கூடைகளில் தரம் பிரித்துக் கொட்டப்படுகின்றன. அவை அனைத்தும் ஒன்றாக சேகரிக்கப்பட்டு மீட்பு பூங்காவுக்கு கொண்டு சென்று மக்கும் உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்க பயன்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் உரங்கள் விளை நிலத்திற்கு ஏற்ற வகையில் இருப்பதால் நல்ல மகசூல் அளிப்பதோடு உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத விளைபொருள்களை அளிப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவிலேயே முன்னோடி முயற்சியாக சோதனை அடிப்படையில் இருசக்கர வாகனம் மூலம் குப்பைகள் பெறப்படுகின்றன. இதற்கென கூடுதல் துப்புரவுப் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவதோடு அவர்கள் சரிவர பணிபுரிகிறார்களா? என்பதை ஆய்வு செய்வதற்கு வாகனத்தில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஜிபிஎஸ் கருவியால் பணியாளர்கள் பணிபுரியும் நேரம் மற்றும் அவர் சென்றிருக்கும் தூரம், எந்த இடத்தில் தற்போது உள்ளார் என்பதை அதிகாரிகள் வீட்டில் இருந்தபடியே கண்காணிக்க இயலும். 
வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தில் தூய்மைப் பணியாளர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வருவதை உறுதி செய்ய கைவிரல் ரேகை அடிப்படையில் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு செய்யப்படுகிறது.  அலுவலகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) குழுக்கள் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள்  உடனுக்குடன்  சரி செய்யப்பட்டு வருகின்றன. 
மழைநீர் சேகரிப்பு மூலம் நிலத்தடி நீர் சேமிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், பல்வேறு பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் கீழ்வேளூர் பேரூராட்சி தமிழ்நாட்டில் 24-ஆவது தூய்மையான நகரம்  என்ற பெயரையும் பெற்றுள்ளது. ""ஓர் ஊர் செழிக்க வேண்டுமானால் மாடி மேல் மாடி கட்டி செல்வச் செழிப்புடன்  அவரவர் வாழ்வை பார்த்துக் கொள்வது மட்டுமல்ல. அவர் அவர் வாழும் ஊரை தூய்மைப்படுத்தி தான் மட்டும் வாழாமல் பிறரும் தூய்மையுடன் நோயற்ற வாழ்வு வாழ்வதாகும்'' என்ற கூற்றை மெய்ப்பித்துள்ளனர் கீழ்வேளூர்வாசிகள். 
கீழ்வேளூரில் சுகாதாரத்தைப் பேணும் வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் தூய்மைப் பணியால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பேரூராட்சிகளிலேயே கீழ்வேளூர் பேரூராட்சியானது முதல் இடத்தைப் பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயமாகும். அது மட்டுமல்லாமல் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்குவதிலும் பேரூராட்சி தன்னிறைவு அடைந்துள்ளது. இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட முறையில் தண்ணீர் வழங்குவதோடு, ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றார்போல் குடிநீரானது பிரித்து வழங்கப்படுகிறது.
தவிர, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் நீர் நிரம்பியவுடன் தொட்டியின் மேற்பகுதியிலிருந்து நீர் வழிந்து வீணாகாமல் தடுக்கும் பொருட்டு, மோட்டாரை உடனடியாக நிறுத்துவதற்கான வசதிகள் கூட செய்யப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் சிறிய பள்ளங்கள் மற்றும் தேவையற்ற பிளாஸ்டிக் குடுவைகள் மற்றும் டயர்களில் தேங்கும் நீரை அகற்றி, டெங்கு, மலேரியா போன்ற நோய்க்கு காரணமான கொசு உருவாக்கத்தைத் தடுத்து தூய்மையைப் பேணி வருகின்றனர். இதே போன்று ஒவ்வொரு பேரூராட்சிகளும் மேற்கொண்டால், தூய்மை இந்தியா கனவு நனவாகும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து கீழ்வேளூரைச் சேர்ந்த பாமக மாநிலத் துணைத் தலைவர் வேதமுகுந்தன் கூறியதாவது:
தமிழகத்தில் கீழ்வேளூர் பேரூராட்சி 24-ஆவது தூய்மை நகரம் என்ற பெயரைப் பெற்றுள்ளது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், தினமும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இப்பகுதியில் சுகாதாரம் பேணிக் காக்கப்படுவதோடு, நோய்வாய்ப்படும் மக்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. மேலும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்றார்போல் நவீனமுறையில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள் அனைத்தும் வரவேற்கத்தக்கவை. 
 இதே பணி மென்மேலும் தொடர்ந்து, தமிழகத்திலேயே 24-ஆவது தூய்மை நகரம் என்ற பெயரை மாற்றி கீழ்வேளூர் பேரூராட்சியியானது முதலாவது தூய்மை நகரம் என்ற பெயரை பெற வேண்டும். இதற்கு இப்பகுதியினர் அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com