மாவட்டத்தில் நிகழாண்டில் 1,283 குளங்கள் தூர்வாரப்படும்:ஆட்சியர் 

குடிமராமத்துத் திட்டத்தின்கீழ், நாகை மாவட்டத்தில் நிகழாண்டில் 1,283 குளங்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். 


குடிமராமத்துத் திட்டத்தின்கீழ், நாகை மாவட்டத்தில் நிகழாண்டில் 1,283 குளங்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். 
நாகை மாவட்டத்தில் உள்ள 434 கிராம ஊராட்சிகளிலும் ஜல்சக்தி அபியான் இயக்த்தின் சார்பில் சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன. இதையொட்டி, கீழையூர் ஊராட்சி ஒன்றியம், காமேஸ்வரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர் சீ.சுரேஷ்குமார், மேலும் பேசியது:
ஜல்சக்தி அபியான் இயக்கத்தின்கீழ், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் கிராமங்களில் நீர்ப் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு, பாரம்பரிய நீர்நிலைகள் மற்றும் ஏரிகளைப் புதுப்பித்தல், கட்டமைப்புகளை மறு பயன்பாடு செய்தல், நீர்வடியும் பகுதிகளை மேம்பாடு செய்தல், தீவீர காடு வளர்ப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி, குடிமராமத்து திட்டத்தின்கீழ் நாகை மாவட்டத்தில் ஏரிகள், குளம், ஊருணிகள், குட்டைகள் உள்ளிட்ட 1,982 நீர்நிலைகள் தூர்வாரத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் முதற்கட்டமாக குடிமராமத்துப் பணிகள் செய்ய தகுதியான 1,283 நீர்நிலைகளில் கொள்ளளவை அதிகப்படுத்தும் வகையில், தூர்வாரும் பணிகள் நடைபெறவுள்ளன.
கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில், திருப்பூண்டி கிழக்கு ஊராட்சியில் உள்ள நல்ல தண்ணி குளம், சிவன்குளம், இரட்டைக்குளம், பெரிய குளம், மண்டபத்தடி குளம் உள்ளிட்ட 185 குளங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெறவுள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், குளங்களில் உள்ள நீராடும் துறைகள், கழிமுகம், மதகு, சிறுகுளம் ஆகியவற்றை சீரமைத்தல் ஆகிய பணிகளும் நடைபெறவுள்ளன என்றார் ஆட்சியர். 
கூட்டத்தில்,  மாவட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ராஜசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, ராஜூ மற்றும் அரசு அலுவலர்கள், கிராம மக்கள்
கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com