கனமழை: சீர்காழியில் கரைகள் உடைப்பு- பயிர்கள் நாசம்

நாகை மாவட்டத்தில் பரவலாக பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் வெள்ளநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கனமழை: சீர்காழியில் கரைகள் உடைப்பு- பயிர்கள் நாசம்


நாகை மாவட்டத்தில் பரவலாக பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் வெள்ளநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நாகை மாவட்டத்தில் கடந்த நான்கு நாள்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. சனிக்கிழமை பெய்த மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின. குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கிராமங்களில் போதிய வடிகால் வசதி இல்லாமல் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், இளம்பயிர்கள் அழுகிவிடுமோ என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.


தரங்கம்பாடியில் 36 வீடுகள் சேதம்...
 தரங்கம்பாடி பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்த தொடர் மழையால் ஞாயிற்றுக்கிழமை வரை 36 வீடுகள் சேதமடைந்துள்ளன.
கொத்தங்குடி, இலுப்பூர், திருவிளையாட்டம், வல்லம், பண்டாரவாடை, ஆயப்பாடி, தில்லையாடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கூரை மற்றும் ஓட்டு வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. தகவலறிந்த தரங்கம்பாடி வட்டாட்சியர் சித்ரா பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார்.
திருக்கடையூர் மாரியம்மன் கோவில் கீழத்தெரு,  தில்லையாடி கிராமத்தில் அமிர்தா நகர், கொத்தங்குடி மாதாகோவில் தெரு, ஆயப்பாடி ஆரம்ப சுகாதார நிலையம்,  அரசு தொடக்கப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.


சீர்காழி அருகே 7 இடங்களில் கரைகள் உடைப்பு
 சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் பொறைவாய்க்கால் கரையில் 7 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் விவசாய நிலங்களில் பாய்ந்து வருகிறது. இதனால், சம்பா சாகுபடி நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன.
சீர்காழி பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் சுமார் 20 செ. மீ.  மழை பெய்துள்ளது. இந்த மழையால், எடமணல் கிராமத்தில் பொறை வாய்க்கால் கதவணை  சேதமடைந்துள்ளது.  சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் உள்ள மழைநீர் பொறை வாய்க்கால் வழியாக எடமணல் கிராமத்தில் உள்ள கதவணைக்குச் சென்று, திருநகரி உப்பனாற்றில் வடிய வேண்டும். ஆனால், இந்த கதவணை மூடப்பட்டிருப்பதால் மழைநீர் வடியாத நிலையில் உள்ளது. இதனால், பொறை வாய்க்கால்  கரையில் 7 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. 
இதன்காரணமாக, எடமணல், சஞ்சீவிராயன்கோவில், ராதாநல்லூர், வருசைபத்து உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடி செய்த 250 ஹெக்டர் நிலப்பரப்பிலுள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அப்பகுதி விவசாயிகள் உடைப்புகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, சீர்காழி பொதுப்பணித் துறைக்கு தகவல் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். 


வலிவலத்தில் வீடு இடிந்தது
 திருக்குவளை அருகே உள்ள வலிவலத்தில் கனமழையால் ஞாயிற்றுக்கிழமை ஒரு வீட்டின் சுவர் இடிந்தது.
திருக்குவளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடிகால் வசதி முறையாக இல்லாததால், மழைநீர் விளைநிலங்களில் தேங்கி கடல்போல் காணப்படுகிறது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.  இந்நிலையில், வலிவலம் கீழத்தெருவில் உள்ள ஒரு வீட்டின்  வெளிப்புற சுவர் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் இடிந்து விழுந்தது. அந்த வீடு ஏற்கெனவே பழுதாகியிருந்ததால், அதன் உரிமையாளர் வீட்டைப் பூட்டி வைத்திருந்தார். இதனால், உயிர் சேதம் 
தவிர்க்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com