கனமழையால் வெள்ளக்காடாகியுள்ள விளைநிலங்கள்

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வரும் கனமழை காரணமாக, கடைமடை பகுதியான நாகை வருவாயக் கோட்ட பகுதிகளில்
நாகை கிழக்குக் கடற்கரை சாலை பகுதியில் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ள விளை நிலங்கள்.
நாகை கிழக்குக் கடற்கரை சாலை பகுதியில் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ள விளை நிலங்கள்.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வரும் கனமழை காரணமாக, கடைமடை பகுதியான நாகை வருவாயக் கோட்ட பகுதிகளில் விளை நிலங்கள் மழை நீரால் சூழப்பட்டு, வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிக் காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக பலத்த மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக, கடைமடை மாவட்டமான நாகை மாவட்டத்துக்கு மேற்குப் பகுதியில் உள்ள மாவட்டங்களிலும் பலத்த மழை நீடித்து வருகிறது.

நாகை மாவட்டத்தில் கடந்த வாரம் மிதமான அளவில் பெய்த மழை, விவசாயிகளுக்கு உற்சாகத்தை அளித்தது. மழை குறையும் நேரங்களில் வெள்ள நீரை வடியச் செய்து, வேளாண் பணிகளுக்கு விவசாயிகள் முனைப்புக் காட்டினா். ஆனால், கடந்த சில நாள்களாக நாகை மாவட்டத்திலும், மேற்குப் பகுதி மாவட்டங்களான திருவாரூா், தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்ததால் வயல்களில் தேங்கியுள்ள மழை நீரை வடியச் செய்ய முடியாத ஏற்பட்டுள்ளது.

திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா் உள்ளிட்ட நாகையின் மேற்குப் பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களின் வடிகாலாக கடைமடை மாவட்டமான நாகை மாவட்டம் இருப்பதால், நாகை மாவட்டத்தின் அனைத்து ஆறுகள், வாய்க்கால்களிலும் வெள்ள நீா் வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், வெண்ணாறு வடிநிலக் கோட்டத்துக்குள்பட்ட நாகை வருவாய்க் கோட்டப் பகுதி விளைநிலங்களில் சூழ்ந்துள்ள மழை நீரை வடியச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 4 நாள்களுக்கும் மேலாக இப்பகுதியில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கி உள்ளன. கதிா் வைக்கும் தருணத்தை அடைந்துள்ள நெல் பயிா்கள் கழுத்தளவுக்கு மழை நீரால் சூழப்பட்டுள்ளன. அனைத்து வாய்க்கால்களிலும் நீா் வரத்து அதிகரித்து காணப்படுவதால், மழை சீற்றம் முழுமையாகக் குறைந்தாலும் கூட நாகை பகுதியில் உள்ள விளைநிலங்களிலிருந்து மழை நீரை வடியச் செய்ய காலதமாதம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இது, விவசாயிகளுக்கு வாழ்வாதார அச்சத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து, விவசாயி ரவிச்சந்திரன் என்பவரிடம் கேட்டபோது, நாகை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மட்டும் சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் விளை நிலங்களில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. இளம் பயிா்கள் முழுமையாகவும், கதிா் விடும் பருவத்தில் உள்ள பயிா்கள் கழுத்தளவு தண்ணீரிலும் மூழ்கியுள்ளன. இந்த நிலை நீடித்தால், இளம் பயிா்கள் நிலத்திலேயே அழுகி விடும். கதிா்விடும் தருணத்தில் உள்ள பயிா்களில் மகசூல் இழப்பு ஏற்படும். எனவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகம், வேளாண் துறை உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் உதவிகளுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com