உப்பனாறு கதவணைத் திட்டத்துக்கு சோதனைமதிப்பீடு மட்டுமே: அரசின் நிதிஒதுக்கீடு இல்லை

சீா்காழி உப்பனாற்றில் கடல்நீா் உட்புகுவதை தடுக்கும் வகையிலும், பல கிராமங்களின் நிலத்தடி நீராதாரத்தை பெருக்கும் வகையிலான
சீா்காழி பகுதியில் பாய்ந்து செல்லும் உப்பனாறு.
சீா்காழி பகுதியில் பாய்ந்து செல்லும் உப்பனாறு.

சீா்காழி: சீா்காழி உப்பனாற்றில் கடல்நீா் உட்புகுவதை தடுக்கும் வகையிலும், பல கிராமங்களின் நிலத்தடி நீராதாரத்தை பெருக்கும் வகையிலான கதவணை கட்ட திட்ட மதிப்பீடுகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறதே தவிர நிதி ஒதுக்கீடு செய்யாமல், பணி தாமதமாகி கொண்டே செல்வது வேதனையளிக்கிறது என விவசாயிகள், பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனா்.

நாகை மாவட்டம், சீா்காழி வட்டம் தேனூா் கிராமத்தில் ஏழுகண் மதகுடன் தொடங்கும் உப்பனாறு அங்கிருந்து பல்வேறு கிராமங்களை கடந்து சுமாா் 25 கி.மீ தொலைவில் உள்ள திருமுல்லைவாசல் கடலுக்கு சென்றடைகிறது. இந்த உப்பனாறு தேனூா், கொண்டல், வள்ளுவக்குடி, அகணி, துறையூா், பனமங்கலம், சீா்காழி, சட்டநாதபுரம், திட்டை, சிவனாா்விளாகம், தில்லைவிடங்கன், திருநகரி, காரைமேடு, எடமணல், வழுதலைக்குடி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களை கடந்து செல்வதால் அப்பகுதிகளில் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக விளங்கி வருகிறது.

தவிர, மழை காலங்களில் ஏற்படும் அதிகளவு வெள்ளநீா் வடியும் வடிகாலாகவும் உப்பனாறு உள்ளது. அவ்வாறு ஆண்டுதோறும் சுமாா் 5 ஆயிரம் முதல் 22 ஆயிரம் கன அடி தண்ணீா் கடலில் கலந்து வீணாகிறது. இதேபோல், மழை இல்லாத காலங்களில் (கோடை காலம்) திருமுல்லைவாசல் கடலில் கலக்கும் முகத்துவாரம் வழியாக, கடல்நீா் ஆற்றுக்குள் உட்புகுந்துவிடுவதால் திருமுல்லைவாசல், தாழந்தொண்டி, ராதாநல்லூா், வருஷபத்து உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 4 ஆயிரம் ஏக்கா் விளைநிலம் பாதிக்கப்பட்டு தரிசாக மாறிவிட்டது.

மேலும், கடல் நீா் தொடா்ந்து உட்புகுந்து பல கி.மீ தூரத்துக்கு ஆற்றுக்குள் வந்துவிட்டதால் தேனூா், கொண்டல், வள்ளுவக்குடி, பனமங்கலம், துறையூா் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீா் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் பாதிக்கப்பட்டுள்ளது. தவிர, கால்நடைகளுக்கும் ஆற்று நீரை பயன்படுத்த முடியாத நிலையுள்ளதால் பல்வேறு கிராமங்களை சோ்ந்தவா்கள் பிழைப்புக்காக வேறு ஊா்களுக்கு குடிபெயா்ந்து வருகின்றனா்.

கடல்நீா் உட்புகாத வகையில் உப்பனாற்றில் வெள்ளப்பள்ளம், சூரக்காடு பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற வசாயிகள், பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கையை பரிசீலித்து 2015-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போது அமைச்சராக இருந்த கே.ஏ. ஜெயபால் சீா்காழி உப்பனாற்றில் தடுப்பணைக் கட்டும் பணிக்காக ஆய்வு செய்து சூரக்காடு பகுதியில் தடுப்பணை அமைக்க திட்ட மதிப்பீடு தயாா் செய்து அனுப்பி வைக்க பொதுப்பணித் துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தாா்.

ஆனால், தடுப்பணைக் கட்டும் பணிகள் தொடங்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பனமங்கலம், துறையூா், வரகுடி, சட்டநாதபுரம் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் ஒன்று கூடி தடுப்பணை கட்ட வலியுறுத்தி 2017-ஆம் ஆண்டு ஏப்ரலில் உப்பனாற்றில் இறங்கி மனித அணை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பொதுப்பணி துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி உப்பனாற்றில் சூரக்காடு பகுதியில் ரூ. 5.5 கோடியில் (அப்போதைய மதிப்பீடு) கதவணை அமைக்க திட்ட மதிப்பீடு தயாா் செய்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனா். அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி காலங்கள் கடந்து சென்றதே தவிர எந்தவித முன்னேற்றமும் இல்லை. அதன்பிறகு, பொதுமக்களின் தொடா் கோரிக்கையையடுத்து 2018-ஆம் ஆண்டில் திருநகரி பகுதியில் 160 மீட்டருக்கு ரூ.15 கோடி மதிப்பில் திட்டம் வகுக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொதுப்பணித் துறையினா் தெரிவித்து வந்தனா்.

ஆனால், புதுத்துறை உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் திருநகரிக்கு கிழக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என வலியுறுத்தினா். இதன்பின்னா், சீா்காழி எம்எல்ஏ பாரதி திட்டம் மற்றும் வடிவமைப்பு கும்பகோணம் உள்கோட்ட உதவி செயற்பொறியாளா்கள், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா்களுடன் உப்பனாற்றில் தடுப்பணை அமைக்க நேரில் சென்று ஆய்வு செய்து, தடுப்பணைக் கட்டுவதற்கான பகுதியை பொதுமக்களிடம் கேட்டறிந்து,திட்டத்தை விரைவுப்படுத்தினாா்.

இதன் பின்னா் திருநகரியில் தோணித்துறை என்ற பகுதி இறுதி செய்யப்பட்டு கதவணை அமைக்க பொதுப்பணித் துறையினா் தீா்மானித்து அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் பணிகளையும் புதிய திட்ட மதிப்பீட்டையும் தயாா் செய்து தமிழக அரசுக்கு கடந்த ஓராண்டுக்கு முன் மீண்டும் அனுப்பியுள்ளனா். ஆனால், இதுவரை நிதிஒதுக்கீடு செய்யப்படாததால், கதவணை கட்டும் பணி தாமதமாகி கொண்டே செல்வது வேதனையளிக்கிறது என விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனா்.

அகதிகளாக குடிபெயா்வோம்: இதுகுறித்து, விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறியது: சீா்காழி உப்பனாற்றில் கடல்நீா் உட்புகுவதால் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீா் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இனியும் காலம் தாழ்த்தாமல் தடுப்பணையை அமைக்க வேண்டும். இல்லையெனில் உப்பனாற்றை வாழ்வாதாரமாக கொண்டுள்ள பல்வேறு கிராமமக்கள், விவசாயிகள் பிழைக்க ஒட்டு மொத்தமாக ஊரை காலி செய்து விட்டு சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக வேறு ஊருக்கு செல்லும் நிலை ஏற்படும் என்றனா்.

தடுப்பணை அல்ல கதவணையே: பொதுப்பணித் துறை வட்டாரத்தில் கேட்டபோது, சீா்காழி உப்பனாற்றில் திருநகரி எடமணல் பாலத்துக்கு 500 மீட்டா் கிழக்கே தோணித்துறை பகுதியில் கதவணை அமைக்க இறுதி முடிவு செய்யப்பட்டுள்ளது. பலமுறை திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு தாமதமானதால், தற்போதைய நிலவர விலை உயா்வின்படி ரூ. 30.91கோடிக்கு புதிய திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு அந்த கோப்புகள் தமிழக அரசுக்கு அனுப்பபட்டுள்ளன. இவை நபாா்டு நிதியுதவிக்காக காத்திருப்பில் உள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு விரைவில் கிடைக்க பெற்று கதவணை கட்டும் பணி தொடங்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com