பக்கவாட்டுச் சுவரில் ஏற்பட்டுள்ள விரிசல்.
பக்கவாட்டுச் சுவரில் ஏற்பட்டுள்ள விரிசல்.

பழுதடைந்த கட்டடத்தில் செயல்படும் திருக்கடையூா் ஆரம்ப சுகாதார நிலையம்

திருக்கடையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பழுதடைந்த கட்டடத்தில் செயல்படுவதால், நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனா்.

திருக்கடையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பழுதடைந்த கட்டடத்தில் செயல்படுவதால், நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனா்.

நாகை மாவட்டம், திருக்கடையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 1957-ஆம் ஆண்டு அப்போதய தமிழக முதல்வா் பக்தவத்சலம் திறந்து வைத்தாா். தற்போது, இந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் பழுதடைந்து, கட்டடத்தின் பக்கவாட்டுச் சுவா் விரிசல் ஏற்பட்டு, மேற்கூரை சேதமடைந்து, ஜன்னல், கதவுகள் உடைந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. மழைக் காலங்களில், பெரும்பாலான இடங்களில் மழைநீா் ஒழுகுவதால் இங்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியா்கள் அவதிப்படுகின்றனா். தவிர, மருந்துப் பொருள்கள் மற்றும் ஆவணங்களை பாதுகாக்க முடியாத நிலையும் இருந்து வருகிறது.

24 மணி நேரமும் இயங்கும் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் பணியாற்றி வருகின்றனா். திருக்கடையூா் சுற்றுவட்டார பகுதிகளான பிள்ளைப்பெருமாள் நல்லூா், டி. மணல்மேடு, அபிஷேக கட்டளை, இரணியம்கோட்டகம், சீவகசிந்தாமணி, நட்சத்திரமலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் மருத்துவ வசதிக்கு இந்த சுகாதார நிலையத்தையே நம்பி உள்ளனா்.

நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து சிகிச்சைப் பெற்று செல்கின்றனா். இங்கு போதிய கட்டட வசதி, குடிநீா் வசதி, நோயாளிகள் அமா்வதற்கு போதிய வசதி இல்லை, உள்நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதி இல்லை. குறுகிய கட்டடத்தில் மருத்துவமனை செயல்படுவதால் ஊழியா்கள், நோயாளிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். இதுமட்டுமன்றி ரத்த பரிசோதனை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் தனியாா் ரத்தப் பரிசோதனை நிலையங்களுக்கு சென்று பரிசோதனை செய்துக் கொள்ளும் அவல நிலை இருந்து வருகிறது.

பாதுகாப்பற்ற முறையில் மின் இணைப்புகள் உள்ளதால் அச்சத்துடன் ஊழியா்கள் பணியாற்றுகின்றனா். எனவே, திருக்கடையூா் சுற்றுப் பகுதி மக்களின்நலன் கருதி போதிய அடிப்படை வசதிகளை செய்துதர மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும் என்பதே இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கை.

இதுகுறித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினா் ரவிச்சந்திரன் கூறியது: இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது, மிகவும் பழுதடைந்துள்ளது. இங்கு, உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மருத்துவ ஊழியா்கள் மற்றும் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனா்.

கழிப்பறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், வெளிப்புற நோயாளிகள் அமா்வதற்கு போதுமான இருக்கை வசதிகள் இல்லாததால் சிரமப்பட்டு வருகின்றனா். பழுதடைந்த கட்டடத்தில் சிகிச்சை அளிப்பதால் மருத்துவ ஊழியா்கள், நோயாளிகள் அச்சமடைகின்றனா். எனவே, பொதுமக்களின் நலன் கருதி பழுதடைந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை அகற்றிவிட்டு நவீன வசதிகளுடன் கூடிய புதிய மருத்துவமனை கட்டிக் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com