மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டே விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் அறிவிப்பு: காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி

மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டே விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என பிரதமர்

மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டே விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.
இதுதொடர்பாக மயிலாடுதுறையில் அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
தமிழகத்தில் மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் திமுக தலைமையில் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்திக்க உள்ளோம். திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்வது, விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வாகாது என்று கூறினார். ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில் விவசாயிகள் பிரச்னையைத் தீர்க்க அவர் எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை.
விவசாயிகளின் பிரச்னைகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி மட்டுமே தீர்வு. ஆனால், நரேந்திர மோடி விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யாததோடு, அதுகுறித்து குறை கூறுகிறார். அவரிடம் விவசாயிகளின் நலனுக்கான மாற்றுத்திட்டம் எதுவும் கிடையாது.
தமிழகத்தில் அதிமுக அரசு தேர்தலைக் கவனத்தில் கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கியது. அதேபோல், பாஜகவும் மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டே விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளது. ரூ.6 ஆயிரம் கொடுப்பதால் விவசாயிகளின் பிரச்னை தீர்ந்துவிடாது.
பாஜக தமிழகத்தில் கூட்டணி அமைக்க முயற்சிக்கிறது. ஆனால், கூட்டணியில் யாரும் சேரவில்லை என்பதால் பிரதமர் விரக்தியில் இருக்கிறார். திமுகவுக்கு எதிராக கமலஹாசன் கருத்து தெரிவித்திருப்பது மதச்சார்பின்மைக்கு எதிராக அவர் பேசியுள்ளதைக் காட்டுகிறது. அனைத்து கட்சிகளிலும் உட்கட்சி பூசல் உள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல்களை சரிசெய்து விடுவோம் என்றார் கே.எஸ். அழகிரி.
முன்னதாக, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக மயிலாடுதுறை வந்த அவருக்கு, ரயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாகை வடக்கு மாவட்டத் தலைவர் ராஜகுமார், நகரத் தலைவர் ராமானுஜம், மாவட்ட முன்னாள் தலைவர் பண்ணை சொக்கலிங்கம், நகர முன்னாள் தலைவர் செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கே.எஸ். அழகிரிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, மயிலாடுதுறை காந்தி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்துக்குச் சென்ற அவர், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com