படகு வழித்தடத்தில் படிந்துள்ள கடல் களிமண் குழம்பை அகற்றும் பணியில் மீனவர்கள்

வேதாரண்யம் அருகே நாகை - திருவாரூர் மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் கஜா புயலின் போது அடித்து

வேதாரண்யம் அருகே நாகை - திருவாரூர் மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் கஜா புயலின் போது அடித்து வரப்பட்ட கடல் களிமண் குழம்பு படகு வழித்தடத்தில் படிந்துள்ளதை, இயந்திரங்களைக் கொண்டு, மீனவர்களே அகற்றிவருகின்றனர்.
நாகை - திருவாரூர் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள முக்கிய வடிகாலான வளவனாறு கடலில் இணையும் கழிமுகப் பகுதி வழியே அப்பகுதி மீனவர்கள் படகுகளை இயக்கிச் சென்று கடலில் மீன் பிடிப்பது வழக்கம்.
வளவனாற்று கழிமுகத்தின் குறுக்கே வாய்மேடு (நாகை மாவட்டம்) - கற்பகநாதர்குளம் (திருவாரூர் மாவட்டம்) இடையே அமைக்கப்பட்டுள்ள இயக்கு அணைக்கு கீழ் பகுதி மீன்பிடிப் படகுகளை நிறுத்தி வைத்துக் கொள்ள ஏதுவாக இருந்துவந்தது.
இங்கு வாய்மேடு, கரையங்காடு, வாடியக்காடு, கற்பகநாதர்குளம், தொண்டியக்காடு, அண்ணாப்பேட்டை, சிந்தாமணிக்காடு உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 105 கண்ணாடியிழைப் படகுகள் இந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்படும்.
கஜா புயலின் தாக்கம்..
கஜா புயலின்போது, வளவனாற்றின் இயக்கு அணைக்கு கீழ் உள்ள பல சதுர கி. மீ.  அளப்பரப்பில் கடலிலிருந்து அடித்துவரப்பட்ட களிமண் குழம்புகள் படிந்தன. இதனால் சுமார் 7 கி. மீ. தொலைவுக்கு படகுகள் இயக்கப்பட்டு வந்த வழித்தடம் தூர்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக, மீனவர்கள் தங்களது படகுகளை ஒடவு பகுதியில் நிறுத்தி, மீன்பிடித் தொழிலை சிறுதலைக்காடு பரப்பில் மேற்கொண்டு வருகின்றனர்.
தூர்வாரும் பணியில் மீனவர்கள்: கடல் களிமண் குழம்பு படிவங்களால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படுவதால், கடந்த இரண்டு வாரங்களாக சுமார் 6 கி.மீ. தொலைவுக்கு தூர்வாரும் பணியை மீனவர்களே தங்களது சொந்த செலவில் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து இந்த பணியின் ஒருங்கிணைப்பாளர் தனபால் கூறும்போது, "கடல் களிமண் குழப்பு பாதிப்பால் வாழ்வாதாரமே கேள்விக்குரியாகியுள்ளது. இது குறித்து அரசிடம் மனுக்கள் அளித்தபோது, நிதியாதாரம் இல்லை எனத் தெரிவித்து விட்டனர். இதனால், மீனவர்களான நாங்கள் சொந்த செலவில் தூர்வாரி வருகிறோம். இப்பணியை அரசு பார்வையிட்டு, உதவ வேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com