வறுமையில் வாழும் முஸ்லிம்களை மீட்க வேண்டும்: எஸ்.எம். இதாயதுல்லா 

வசதி படைத்த முஸ்லிம்கள் வறுமையின் பிடியில் உள்ள முஸ்லிம்களை மீட்க ஜகாத் எனும் ஏழை வரியைக் கணக்கிட்டு

வசதி படைத்த முஸ்லிம்கள் வறுமையின் பிடியில் உள்ள முஸ்லிம்களை மீட்க ஜகாத் எனும் ஏழை வரியைக் கணக்கிட்டு அந்தந்த பகுதியில் உள்ள பைத்துல்மால்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு பைத்துல்மால்களின் ஒருங்கிணைப்பாளரும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான எஸ்.எம். இதாயதுல்லா கூறினார். 
நாகை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள தேரழந்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற முசாஅத்துல் முஸ்லீமீன் பைத்துல் மால் எனும் ஏழைகள் நிதியம்  தொடக்க விழாவில் மேலும் அவர் பேசியது: ஜகாத் எனும் ஏழை வரியை கூட்டு சேர்ந்து குர்-ஆனில் தெரிவித்துள்ளபடி தேவையுடைய ஏழைகளுக்கு வழங்கவேண்டும். பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த நடைமுறைப்படி ஜகாத் தொகையை ஏழைகளுக்கு வழங்காமல் அவரவர் விரும்பிய நபர்களுக்கு வழங்கி வந்தனர். ஜகாத் எப்படி, யாருக்கு வழங்க வேண்டும் என்ற விதிமுறை தெரியாததால் பலர் அவ்வாறு செய்து வந்தனர். அவர்களுக்கு நபிகளாரின் வாழ்க்கை நடைமுறைகளில் இருந்து உரிய ஆதாரங்களுடன் விளக்கம் அளித்து 'பைத்துல்மால்' எனும் ஏழைகளுக்கான நிதியம் உருவாக்க ஏற்பாடு செய்து வருகிறோம். 
ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊரின் முக்கிய முஸ்லிம் பிரமுகர், ஆலிம் எனப்படும் மதகுரு ஆகியோரை நிர்வாகிகளாகக் கொண்டு இந்த பைத்துல்மால்கள் அமைக்கப்படுகின்றன. இவர்கள் வரவு, செலவு கணக்குகளை முறைப்படி பேண வேண்டும். தமிழகத்தில் சுமார் 6 ஆயிரம் மொஹல்லாக்கள் (பள்ளிவாசல்களைச் சுற்றியுள்ள முஸ்லிம்களின் குடியிருப்புகள்) உள்ளன. ஆனால், இதில் 25 சதவீதம் அளவுக்கே பைத்துல்மால்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து மொஹல்லாக்களிலும் பைத்துல்மால்கள் அமைக்க வேண்டும் என்கிற லட்சியத்தை நோக்கி செயலாற்றி வருகிறோம்.
முஸ்லிம்கள் வட்டி தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், வறுமையில் வாடும் பலர் வட்டிக்கு கடன் பெற்று தொழில் தொடங்குவது, மருத்துவம், கல்வி, திருமணம் ஆகியவற்றுக்காக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்க்கவும், கல்லாமை, இல்லாமை, இயலாமை ஆகியவற்றை நீக்கவும் பைத்துல்மால்கள் உதவியாக உள்ளன. வசதி படைத்த முஸ்லிம்கள் முறைப்படி ஜகாத் எனும் ஏழை வரியைக் கணக்கிட்டு அந்தந்த பகுதியில் அமைந்துள்ள பைத்துல் மால்களுக்கு வழங்கினால், மிகவும் வறுமையில் வாழும் பல்லாயிரம் முஸ்லிம்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுக்க முடியும் என்றார் இதாயதுல்லா. 
ஏ. முஹம்மது சுல்தான் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பண்டாரவாடை இமாம் முஹம்மது இலியாஸ் திருக்குர்ஆன் கிராஅத் ஓதினார். இஸ்லாமிய பாடகர் ஏ.எஸ். தாஜ்தீன் வரவேற்றார். திருமங்கலக்குடி இமாம் அப்துல்ரஜாக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். வடகரை ஒய்.எம். ஹபீப்ரஹ்மான், முஹம்மது சித்தீக், முசாஹூதீன், நக்கம்பாடி அலிஅக்பர், ஜஹபர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com