ஜன.11-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்
By DIN | Published On : 05th January 2019 07:49 AM | Last Updated : 05th January 2019 07:49 AM | அ+அ அ- |

மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள், நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜன. 11-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நாகை மாவட்டப் பிரிவு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜன. 11-ஆம் தேதி நடைபெறுகிறது.
கை, கால் ஊனமுற்றோர் பிரிவில், குழு விளையாட்டுப் போட்டிகளாக இறகுப் பந்து, மேசைப்பந்து, கண்பார்வையற்றவர்களுக்கு அடாப்ட் வாலிபால், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு எறிபந்து போட்டி, காது கேளாதவர்களுக்கான கபடி போட்டி ஆகியன நடத்தப்படுகிறது.
தடகளப் போட்டிகளாக, கால் ஊனமுற்றவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டம் மற்றும் மினி கூடைப்பந்து, கை ஊனமுற்றவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டம், குள்ளமானோருக்கு நீளம் தாண்டுதல், இருகால்களும் ஊனமுற்றவர்களுக்கு 100 மீட்டர் சக்கர நாற்காலி போட்டி ஆகியன நடத்தப்படும். முற்றிலும் பார்வையிழந்தவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டம் மற்றும் குண்டு எறிதல், மிக குறைந்த பார்வையற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், டென்னிஸ் பந்து எறிதல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஓட்டப் போட்டிகள், காது கேளாதோருக்கான ஓட்டப் போட்டிகள் என ஆடவர் மற்றும் மகளிருக்குத் தனித்தனியே பல்வேறு போட்டிகள் நடத்தப்படும்.
குழு போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் வீரர்கள், வீராங்கனைகளுக்குப் பதக்கம் மற்றும் சான்றிதழ்களும், தடகளப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறுவர்களுக்குப் பரிசுகள், சான்றிதழ்களும் வழங்கப்படும். இந்தப் போட்டிகளில் முதலிடம் பெறுபவர்கள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.