காந்திய சிந்தனை குறித்த கருத்தரங்கம்

மயிலாடுதுறையில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் காந்திய சிந்தனை குறித்த கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

மயிலாடுதுறையில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் காந்திய சிந்தனை குறித்த கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் மற்றும் தினமணி நாளிதழ் சார்பில், மகாத்மா காந்தியடிகளின் 150 -ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி கல்லூரி மாணவ, மாணவியருக்கான கட்டுரைப் போட்டி கடந்த அக்டோபரில் நடத்தப்பட்டது. 
1,390 மாணவ, மாணவியர் கலந்துகொண்ட இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50  மாணவ, மாணவியருக்கு, தமிழகத்தில் காந்தியடிகள் வந்து சென்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், அவருடைய கொள்கைகளைப் பின்பற்றி நடக்கும் இடங்கள் ஆகியவற்றை பார்வையிடும் வகையில் "அண்ணலின் அடிச்சுவட்டில்' என்ற காந்திய சுற்றுப்பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரும், அருங்காட்சியக பொதுக்குழு உறுப்பினருமான வழக்குரைஞர் டி.எஸ்.ஆர். வேங்கட்ரமணா தலைமையில் அருங்காட்சிக்கூட விரிவுரையாளர் முனைவர் சப்ரா பீபி அல் அமீன், வழக்குரைஞர் எஸ். பிரித்விராஜ் மற்றும் மாணவ, மாணவியர் புறப்பட்டு, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள காந்தியடிகள் வந்து சென்ற இடங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்வையிட்டனர்.
செவ்வாய்க்கிழமை இரவு மயிலாடுதுறையில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் காந்திய சிந்தனை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் கமிட்டி நாகை மாவட்ட முன்னாள் தலைவர் இராம. சிதம்பரம் தலைமை வகித்தார். காங்கிரஸ் கமிட்டியின் நாகை மாவட்ட முன்னாள் தலைவர் பண்ணை டி. சொக்கலிங்கம், நகர முன்னாள் தலைவர் செல்வம், மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநிலச் செயலாளர் ஆர்.கே. கனகசபை, நகர முன்னாள்  தலைவர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தருமபுரம் ஆதீனம் கல்லூரி முன்னாள் முதல்வர் சிவச்சந்திரன், மயிலாடுதுறை திருக்குறள் பேரவையின் தலைவர் சிவசங்கரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஐ.என்.டி.யு.சி. மாவட்டத்  தலைவர் ரெங்கநாதன் நன்றி கூறினார்.
தொடர்ந்து, புதன்கிழமை காலை திருவிழந்தூரில் மகாத்மா காந்தி தங்கியிருந்த இடத்தை சுற்றுப்பயணக் குழுவினர் பார்வையிட்டனர். 1945 -ஆம் ஆண்டு தில்லையாடி வள்ளியம்மையை சந்திப்பதற்காக வந்த மகாத்மா காந்திக்கு, ஏப்ரல் 28 -ஆம் தேதி மாயூரம் நகராட்சி அலுவலகத்தில், அப்போதைய நகர் மன்றத் தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் அங்கிருந்து மகாத்மா காந்தி மாட்டு வண்டியில் தில்லையாடிக்கு புறப்பட்டுச் சென்றார். இதன் நினைவைப் போற்றும் வகையில் நகராட்சி அலுவலகத்தில் மகாத்மா காந்தி முழு உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. 
திருவிழந்தூரிலிருந்து புறப்பட்ட சுற்றுலாக் குழுவினர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் தில்லையாடி புறப்பட்டுச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com