கூடுதல் அறுவடை இயந்திரங்களுக்கு ஏற்பாடு செய்யக் கோரிக்கை
By DIN | Published On : 29th January 2019 04:03 AM | Last Updated : 29th January 2019 04:03 AM | அ+அ அ- |

திருமருகல் ஒன்றியப் பகுதிகளில் நெல் அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், கூடுதல் அறுவடை இயந்திரங்களுக்கு நாகை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, கரிகாலன் கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவர் கு .ஹமீது ஜெகபர் மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமாருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
திருமருகல் ஒன்றியத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, இதில் சுமார் 50 சதவீத நிலங்களில் தற்போது, அறுவடைப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், போதுமான அறுவடை இயந்திரங்கள் இப்பகுதிகளுக்கு வராததால், விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், நெற்கதிர்கள் காய்ந்து மகசூல் குறையும் நிலை உள்ளது. எனவே, போதுமான அறுவடை இயந்திரங்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், திருமருகல் ஒன்றியப் பகுதிகளில் இதுவரை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. எனவே, உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறப்பதுடன், 2017-2018 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.