பெண் குழந்தைகளுக்கு கல்வி அறிவை புகட்ட வேண்டும்
By DIN | Published On : 29th January 2019 04:04 AM | Last Updated : 29th January 2019 04:04 AM | அ+அ அ- |

பெண் குழந்தைகளுக்கு கல்வி அறிவை புகட்ட வேண்டும் என நாகை மாவட்ட சுகாதார இணை இயக்குநர் மகேந்திரன் கூறினார்.
மயிலாடுதுறை பெரியார் அரசினர் மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின கருத்தரங்கில் மேலும் அவர் பேசியது: மத்திய, மாநில அரசுகள் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்துவிட்டதே என்று தாய்மார்கள் கவலைப்படக் கூடாது. இரண்டு பெண் குழந்தை பெற்றவர்களுக்கு அரசு வைப்புத்தொகை வழங்குகிறது. பெண் குழந்தைகளுக்கு நிச்சயம் கல்வி அறிவை புகட்ட வேண்டும். பெண் குழந்தைகளை குறைந்தது பட்டப்படிப்பு வரையாவது பெற்றோர் படிக்கவைக்க வேண்டும் என்றார்.
மருத்துவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், மருத்துவர்கள் சந்திரசேகரன், பத்மராஜன், வீரசோழன், பரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், பெண் குழந்தைகளை பெற்றெடுத்த 9 தாய்மார்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.