ஈமச்சடங்கு உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 18th July 2019 12:26 AM | Last Updated : 18th July 2019 12:26 AM | அ+அ அ- |

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களுக்கான ஈமச்சடங்கு உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிராம ஊராட்சிகளில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர்கள் இறந்தால், ஈமச்சடங்கு உதவித் தொகையாக அவர்களின் குடும்பத்துக்கு, தொடர்புடைய ஊராட்சி மூலம் ரூ. 2,500 வழங்கப்படுகிறது. இறந்தவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 40 ஆயிரத்துக்கு மிகாமலிருக்க வேண்டியது
அவசியம். இத்திட்டத்தின் கீழ், 2019-2020-ஆம் ஆண்டில் நாகை மாவட்டத்துக்கு ரூ. 3.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ஊராட்சிப் பகுதிகளில் இந்த மானியத்தைப் பெறத் தகுதியானவர்கள் இருந்தால், தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலரின் சான்றுடன், தொடர்புடைய ஊராட்சியின் தனி அலுவலர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சி) விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.