பருத்திக்கு உரிய விலை வழங்க வியாபாரிகள் மறுப்பு: விவசாயிகள் சாலை மறியல்

வியாபாரிகள் தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த

வியாபாரிகள் தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த பருத்திக்கு உரிய விலையை வழங்காமல் சென்றதால், விவசாயிகள் சனிக்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கோடைப் பருத்தியை, அப்பகுதி விவசாயிகள் மாயூரம் கூட்டுறவு விற்பனை சொசைட்டியில் விற்பனை செய்து வருகின்றனர். சனிக்கிழமை ஒருநாள் மட்டும் செயல்படும் இந்த கூட்டுறவு சொசைட்டியில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பருத்தியை, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து தரத்துக்கு ஏற்றாற்போல் விலை நிர்ணயம் செய்து ஏலமுறையில் வாங்கிச் செல்வது வழக்கம். 
இந்த ஏலத்தில் 4 வியாபாரிகள் மட்டுமே கலந்துகொண்டு, ஏலம் எடுப்பதாகவும்,  மற்ற வியாபாரிகளை ஏலத்தில் கலந்துகொள்ள விடாமல் எதேச்சதிகரமாக விலை நிர்ணயம் செய்வதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது.
இந்நிலையில் சனிக்கிழமை விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை வியாபாரிகள் பார்வையிட்டு ஒரு குவிண்டால் ரூ.5,500 முதல் ரூ.5,800 வரை விலை நிர்ணயம் செய்தனர். ஆனால் பருத்திக்கு உரிய பணத்தை வழங்குவதில், வியாபாரிகளுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வியாபாரிகள் பருத்திக்கு உரிய பணத்தை வழங்காமல் சென்றுவிட்டனர். அப்போது மழை பெய்ததால், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த பருத்தி மழையில் நனைந்தது. 
சாலை மறியல்...
இதனைக் கண்டித்து பருத்தி விவசாயிகள், கூறைநாடு பகுதியில் மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தகவலறிந்து வந்த மயிலாடுதுறை வட்டாட்சியர் இந்துமதி மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் திங்கள்கிழமை (ஜூலை 22) பருத்திக்கு உரிய பணத்தை பெற்றுத்தருவதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, விவசாயிகள் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com