மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

நாகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகையில்
நாகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ், மழைநீரை சேகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. நாகை வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன் தலைமை வகித்து பேரணியைத் தொடங்கி வைத்தார்.  வட்டார வளர்ச்சி அலுவலர் செபஸ்தியம்மாள் முன்னிலை வகித்தார். மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் முழக்கங்களுடன் மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். 
நாகை அவுரித் திடலிலிருந்து புறப்பட்ட இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்று நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியின் நிறைவில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசன் நன்றி கூறினார். 

திருமருகலில்
திருமருகலில் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
பள்ளியிலிருந்து புறப்பட்ட பேரணி, வடக்குத் தெரு, மேலத்தெரு, சந்தைப் பேட்டை, பிரதான சாலை, திருமஞ்சன வீதி வழியாக மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. முன்னதாக, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் க. அன்பரசு, ஜி.ஆர். இளங்கோவன் (கிராம ஊராட்சி), தலைமையாசிரியர் நிர்மலாராணி ஆகியோர் பேரணியைத் தொடங்கி வைத்தனர். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்செல்வம், மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில் குமார், மனோகரன், ஆசிரியர் ஜீவாராம் மோகன், ஊராட்சி செயலாளர் சிவக்குமார் மற்றும் 300-க்கும் மேற்ற மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதேபோல், திருக்கண்ணபுரம், ஏனங்குடி, மருங்கூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

மருதூரில்
வேதாரண்யத்தை அடுத்த மருதூரில் மருதூர் தெற்கு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நீர்வள மேலாண்மை குறித்த விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் தேசியப்படை அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் வெ. பொதுவுடைச்செல்வன் தலைமை வகித்தார். பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் நெடுஞ்செழியன் கொடியசைத்துப் பேரணியைத் தொடங்கி வைத்தார். முன்னதாக, பட்டதாரி ஆசிரியர் ச. ரவி, ஜல் சக்தி அபியான் திட்டம் குறித்து விளக்கிப் பேசினார்.பேரணியில், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச்சென்ற மாணவர்கள், நீர் சேமிப்பின் அவசியம் குறித்த முழக்கங்களை எழுப்பிச் சென்றனர்.
கிராமத்தின் தெருக்கள் வழியே பேரணியாகச் சென்ற மாணவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். இதில் தேசிய பசுமைப் படையின் பொறுப்பாசியர் இர.செழியன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com