உலக அரங்கில் அரசியல், பொருளாதாரத்தில் இந்தியா வல்லரசு நாடாக திகழும்
By DIN | Published On : 14th June 2019 10:56 AM | Last Updated : 14th June 2019 10:56 AM | அ+அ அ- |

திருச்செங்கோடு, ஜூன் 13: அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் உலக அரங்கில் அரசியல், பொருளாதாரத்தில் இந்தியா வல்லரசு நாடாக திகழும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
திருச்செங்கோட்டில் தேசிய சிந்தனை பேரவையின் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரவையின் தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். துணைத் தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தார் . செயலாளர் ராஜா வரவேற்றார். கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவு கொள்கையின் காரணமாக , உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருக்கிறது. மத்திய அரசின் நலத் திட்ட உதவிகள், ஏழை எளியர்களுக்கு முறையாக கிடைப்பதற்கு தொண்டர்கள் பணியாற்ற வேண்டும். அடுத்து வரும் ஐந்தாண்டுகள் இந்தியா உலக அரங்கில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் வல்லரசு நாடாக திகழும் என்று பேசினார். இக்கூட்டத்தில் ஒன்றியச் செயலாளர் மோதிலால், செயற்குழு உறுப்பினர்கள் வஜ்ரவேல், மதியரசு, நாகராஜ் , சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சரவைக்கு வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது.
திருச்செங்கோடு, தேவனாங்குறிச்சி, மல்லசமுத்திரம், பள்ளிபாளையம் போன்ற பகுதிகளில் விசைத்தறி நிறைந்து காணப்படுகிறது . சுமார் இருபது லட்சம் தொழிலாளர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள் . இந்த விசைத்தறி தொழிலை இன்னும் மேம்படுவதற்கு வசதியாகவும், உற்பத்தி பொருள்கள் விற்பனைக்காகவும் திருச்செங்கோட்டை மையமாக வைத்து ஜவுளி பூங்காவை மத்தியஅரசு உடனடியாக தொடங்க வேண்டும் .
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு வருகை தரும் வெளியூர் பக்தர்கள், தங்கி ஓய்வெடுக்கவும் , குளிப்பதற்கு வசதியாகவும் தேவஸ்தானம் சார்பில் தங்கும் விடுதிகள் கட்ட வேண்டும்.திருச்செங்கோட்டில் அரசு கலைக் கல்லூரி அமைக்க
வேண்டும்.