குழாயில் உடைப்பு: 3 மாதங்களாக வீணாகி வரும் குடிநீர்

சீர்காழி அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 3 மாதங்களாக குடிநீர் வீணாகி அருகில் உள்ள வயலில்

சீர்காழி அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 3 மாதங்களாக குடிநீர் வீணாகி அருகில் உள்ள வயலில் குளம் போல் தேங்கியுள்ளது. நாடு முழுவதும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், இங்கு குடிநீர் வீணாகி வருவது இப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி அருகே உள்ளது ஓலையாம்புத்தூர் கிராமம். இந்த கிராமத்துக்கு  கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், ஓலையாம்புத்தூர் கிராமத்தில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகே குடிநீர் குழாயில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தெரிவித்ததையடுத்து,  குடிநீர் வாரிய ஊழியர்கள், குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் பெரிய பள்ளம் தோண்டி உடைப்பை சரி செய்தனர். இருப்பினும், முழுமையாக உடைப்பை சரி செய்யாததால், கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் வெளியேறி, பள்ளத்தில் குளம்போல் தேங்கியதுடன், அருகில் உள்ள வயலில் பாய்ந்தோடுகிறது.
கடும் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சீர்காழி வட்டத்தில் சில கிராமங்களில் குடிநீருக்காக கிராம மக்கள் பல கி.மீ. தூரம் அலைந்துவரும் நிலையில், குடிநீர் வடிகால் வாரியம் இவ்வாறு அலட்சியமாக குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்யாமல் குடிநீரை வீணாக்கி வருவது  ஓலையாம்புத்தூர் கிராம மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இனியும் தாமதிக்காமல் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி
வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com