தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளால் பொதுமக்கள் அச்சம்

சீர்காழி அருகே தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சீர்காழி அருகே தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சீர்காழி அருகே  அகணி, நிம்மேலி, மருதங்குடி ஆகிய ஊராட்சிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில்  மின்கம்பிகளும், மின்கம்பங்களும் ஆபத்தான நிலையில் உள்ளன. குறிப்பாக அரூர், மன்னங்கோயில், ஆலஞ்சேரி பகுதிகளில் மின்கம்பிகள் சாலையோரம் தாழ்வான நிலையில் செல்கின்றன. இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது மின்கம்பிகள் உரசும் அபாயம் உள்ளதால்,  அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த  தனியார் சிற்றுந்து கடந்த சில ஆண்டுகளாக இயக்கப்படவில்லை.
விவசாயிகள் தங்கள் வயல்களிலிருந்து நெல்மூட்டைகள், வைக்கோல் ஆகியவற்றை கனரக வாகனத்தில் ஏற்றி செல்லும்போது, மிகுந்த கவனத்துடனும், அச்சத்துடனும் சாலையைக் கடந்து செல்கின்றனர். தற்போது, பருத்தி அறுவடை நடைபெற்று, சிறிய லாரிகளில் பருத்தி பஞ்சு மூட்டைகளை விவசாயிகள் ஏற்றிச் செல்லும்போது, வாகனத்தில் மின்கம்பி உரசி தீப்பற்றி ஏதேனும் பெரும் விபத்து நேரிடும் ஆபத்து உள்ளது
 இதேபோல் அகணி, நிம்மேலி உள்ளிட்ட பகுதிகளில்  மின்கம்பிகள் மீது மரக்கிளைகள், செடி, கொடிகள் படர்ந்து அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. மேலும், காற்று வேகமாக வீசும் போது மரக்கிளைகள் மீது மின்கம்பிகள் உரசி மின் விபத்து ஏற்படவும், மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் அறுந்து விழும் அபாய நிலையும் உள்ளது.
எனவே, மின்வாரியத் துறையினர்  இதை உடனடியாக ஆய்வு செய்து அரூர், ஆலஞ்சேரி, மருதங்குடி, அகணி உள்ளிட்ட கிராமங்களில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்கவும், மின்கம்பியில் உரசும் மரக் கிளைகளை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நந்தியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜி.ஏ.ராஜேஷ் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com