நாகை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ நேரில் ஆய்வு
By DIN | Published On : 24th June 2019 10:27 AM | Last Updated : 24th June 2019 10:27 AM | அ+அ அ- |

நாகை அரசு மருத்துவமனையில் சட்டப் பேரவை உறுப்பினர் எம். தமிமுன் அன்சாரி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
நாகை அரசுப் பொது மருத்துவமனையில், போதிய அளவு தண்ணீர் இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையின் அனைத்து வார்டுகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், நகராட்சி மூலம் லாரிகளில் தண்ணீர் கொண்டுவர செய்து தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வுகாண நடவடிக்கை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் தமிமுன் அன்சாரி கூறியது:
நாகை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சில கிராமங்களில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்று குடிநீர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகை அரசு மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை.
மருத்துவமனை வளாகத்தில் 8 கிணறுகளும், 10 ஆழ்துளைக் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சுமார் 1 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. இந்நிலையில், நோயாளிகளின் நலன் கருதி, நகராட்சி நிர்வாகம் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் தற்போது, 7 மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 5 மழைநீர் தொட்டிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஆய்வின்போது, நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஆர். முருகப்பன், நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.