ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக மனிதச்சங்கிலி போராட்டம்

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாகை மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாகை மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஓ.என்.ஜி.சி. மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு  அனுமதியளித்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்நிலையில், ஹைட்டோகார்பன் திட்டத்தை கைவிடக் கோரியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர் பங்கேற்ற மனிதச் சங்கிலி போராட்டம் நாகை மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.
புத்தூரில்...
நாகையை அடுத்த புத்தூர் அண்ணா சிலை அருகே  தொடங்கி சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற மனிதச் சங்கிலியில், அரசியல் கட்சியினர், விவசாயிகள் கைகோர்த்தபடி சாலையோரங்களில்  நின்று ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிப்புத் தெரிவித்து, முழக்கங்களை எழுப்பினர். 
 இதில், திமுக நாகை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் என். கெளதமன், முன்னாள் அமைச்சரும், கீழ்வேளூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான உ.மதிவாணன், மனிதநேய ஜனநாயக கட்சிப் பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டர்.
வாஞ்சூரில்...
வாஞ்சூரில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் இந்திய தேசிய லீக் தேசிய பொதுச் செயலாளர் எம்ஜிகே நிஜாமுதீன், திமுக நாகூர் நகரச் செயலாளர் செந்தில்குமார், திருமருகல் ஒன்றியச் செயலாளர்கள் செல்வ. செங்குட்டுவன்,  சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
இதேபோல் வேளாங்கண்ணி, பூவைத்தேடி, காமேஸ்வரம், விழுந்தமாவடி உள்ளிட்ட பகுதிகளிலும்  மனிதச் சங்கிலி போராட்டங்கள் நடைபெற்றன.
எம்பி ராமலிங்கம் பங்கேற்பு...
ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கண்டித்து தரங்கம்பாடி, திருக்கடையூர், ஆக்கூர் ஆகிய பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் நிலம்- நீர் மீட்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
திருக்கடையூரில் மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், திமுக மாவட்டத் துணைத்தலைவர் சத்தியேந்திரன், செம்பை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் அப்துல் மாலிக், திருக்கடையூர் ஊராட்சி செயலாளர் ரமேஷ், இளைஞர் அணி ஒன்றிய துணைச் செயலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பொறையாறு காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
வேதாரண்யத்தில்...
வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு பாலம் முதல் செருதூர் பாலம் வரையில், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக கடலோர கிராம மக்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
 போராட்டத்துக்கு கடலோர கிராம ஹைட்ரோகார்பன் திட்ட எதிப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். வேட்டைக்காரனிருப்பு முதல் கன்னித்தோப்பு வரையிலான சுமார் 6 கி.மீ. தொலைவில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தொடர்ச்சியாக கைகோர்த்து நின்று முழக்கங்களை எழுப்பினர்.
கிழக்கு கடற்கரை சாலையில்...
வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு ஒன்றியத்துக்கு உள்பட்ட கிழக்கு கடற்கரை சாலையோரத்தில், மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. அருந்தவம்புலம், ஆலங்குடி பகுதிகளில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பெண்கள் உள்பட ஏராளமானோர்
பங்கேற்றனர்.
பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் விடுத்த அழைப்பின்பேரில், பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
சீர்காழியில்...
சீர்காழி பழைய பேருந்து நிலைய பகுதியிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு, நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா எம்.முருகன் தலைமை வகித்தார். காவிரிப் படுகை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இமயவரம்பன், டெல்டா நீர் ஆதார பாதுகாப்பு அமைப்பு தலைவர் கிள்ளை. ரவீந்திரன், காங்கிரஸ் கட்சி நாகை வடக்கு மாவட்டத் தலைவர் ராஜகுமார், மதிமுக மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் மார்கோனி, மனிதநேய மக்கள் கட்சி விவசாய அணி செயலாளர் முசாகுதீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் செல்லப்பன்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் ரமேஷ், மக்கள் நீதி மையம் பொறுப்பாளர் பாஸ்கரன், பெரியார் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் பெரியார் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com