திருவெண்காட்டில் நாள்தோறும் 8 ஆயிரம் லிட்டர்  குடிநீர் வழங்கும் சமூக ஆர்வலர்

நாகை மாவட்டம், திருவெண்காட்டில் நாள்தோறும் 8 ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கி வரும்

நாகை மாவட்டம், திருவெண்காட்டில் நாள்தோறும் 8 ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கி வரும் சமூக ஆர்வலருக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். 
திருவெண்காட்டை சேர்ந்த கிருஷ்ணமுர்த்தி அய்யர் மகன் காசிராமன். சமூக ஆர்வலரும், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியுமான இவர், சென்னையில் தொழில் செய்து வருகிறார். விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாகவும், இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார், இயற்கை விவசாயி நெல். ஜெயராமன் உள்ளிட்ட முன்னோடி வேளாண் விஞ்ஞானிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு திருவெண்காடு எம்பாவை கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். 
கோ. நம்மாழ்வாரின் கூற்றுப்படி தண்ணீரை பூமியில் தேடக்கூடாது வானத்தில் இருந்து கொண்டு வரவேண்டும் என்ற கோட்பாட்டின்படி தனது வீட்டில் மழை நீரை கிணற்றில் சேமித்து, கடந்த 3 ஆண்டுகளாக கோடை காலத்தில் பொது மக்களுக்கு இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கி வருகிறார். வழக்கத்தைத் தொடர்ந்து, நிகழாண்டும் கோடை வெயில் வாட்டி வரும் தற்போதைய நிலையில் பொதுமக்களுக்கு நாள்தோறும் 8 ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கி வருகிறார். 
தொடக்கத்தில் காசிராமன் தன்வீட்டு முன்பு மண்பானையில் தண்ணீர் வைத்து குடிநீர் வழங்கும் சேவையை தொடங்கினார். அப்போது, பொதுமக்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தனது வீட்டு கிணற்றிலிருந்து நவீன இயந்திரங்கள் கொண்டு சுத்திகரித்து இலவச குடிநீர் சேவையை தொடர்ந்து வருகிறார். 
மேலும் இவர் வழங்கி வரும் குடிநீரில் வெந்தயம், கருஞ்சீரகம் கலக்கப்படுகிறது. கோடை காலத்தைத் தொடர்ந்து, மழைக் காலத்திலும் மூலிகை குடிநீரை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு, நாள்தோறும் வாகனங்களில் செல்வோர், வீட்டுக்கு உபயோகிப்பவர்கள் என பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று குடிநீரை எடுத்துச் செல்கின்றனர்.
இதுகுறித்து, காசிராமன் கூறியது: பண்டைய காலங்களில் கிராமங்களில் குளங்களை நன்றாக பராமரித்ததன் காரணமாக நல்ல சுவையான குடிநீர் கிடைத்தது. தற்போது குளம், குட்டைகள் மற்றும் ஏரிகள் முற்றிலும் ஆக்கிரமைப்பு செய்யப்பட்டுள்ளதால், மழைக் காலங்களில் தண்ணீரை சேமிக்க முடியவில்லை. மேலும், வீடுகள்தோறும் கிணறுகள் இருந்தன. 
காலப்போக்கில் கிணறுகள் தூர்ந்து போனது. இதனால்தான் தற்போது கடும் குடிநீர் பஞ்சத்தை எதிர்நோக்கி உள்ளோம். எனவே, வரும் காலங்களில் வீடுகள்தோறும் கிணறுகள் அமைத்தல், குளங்களை தூர்வாருதல், பண்டைய மரபு கட்டுமானப்படி வீடுகள் கட்டுதல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளேன் என்றார் காசிராமன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com