இளம்பெண் சாவு: உறவினர்கள் சாலை மறியல்
By DIN | Published On : 24th March 2019 05:13 AM | Last Updated : 24th March 2019 05:13 AM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் உயிரிழந்த இளம்பெண், பாலியல் தொல்லையால் இறந்திருக்கலாம் எனக் கூறி, அவரது உறவினர்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி இறந்ததைத் தொடர்ந்து, இவர்களது மகள் மகேஸ்வரி (17) மதுரா நகரைச் சேர்ந்த உறவினர் நாகராஜ் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் உடல் நலம் பாதிக்கப்பட்ட மகேஸ்வரியை திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சைப் பலனின்றி மகேஸ்வரி உயிரிழந்தார்.
மகேஸ்வரியின் உடலை தகனம் செய்வதற்காக நாகராஜ் குடும்பத்தினர் சனிக்கிழமை இரவு மயானத்துக்கு எடுத்துச் சென்றனர். அப்போது, திருவிழந்தூர் ராமர் கோயில் பகுதியில் அவர்களை தடுத்து நிறுத்திய மகேஸ்வரியின் உறவினர்கள், மகேஸ்வரிக்கு நாகராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர் இறந்ததாகவும், இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மகேஸ்வரியின் உடலை சாலையில் கிடத்தி மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவலறிந்த மயிலாடுதுறை துணைக் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையிலான போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மகேஸ்வரியின் உறவினர்கள் தெரிவித்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என காவல் துறையினர் உறுதியளித்ததையடுத்து, சாலை மறியலை விலக்கிக் கொண்டனர். இந்த போராட்டத்தால் மயிலாடுதுறை-மணல்மேடு சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.