வைத்தீஸ்வரன்கோயிலில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
By DIN | Published On : 15th May 2019 08:44 AM | Last Updated : 15th May 2019 08:44 AM | அ+அ அ- |

சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயில் மட வளாகங்களில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பக்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வைத்தீஸ்வரன்கோயிலில் பிரசித்திப் பெற்ற வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. செவ்வாய் பரிகார தலமான இக்கோயிலுக்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். வைத்தீஸ்வரன்கோயில் தெற்கு மாட வீதியில் இருபுறமும் வீடுகள், குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அப்பகுதியில் தேங்கி நிற்பதைத் தடுக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் செல்ல சில மீட்டர் தூரத்துக்கு குழாய் பதிக்கும் பணி தொடங்கியது.
இதற்காக அப்பகுதியில் வீடுகள் முன் பள்ளம் வெட்டி குழாய் பதித்துள்ளனர். ஆனால் பணிகள் தாமதமாக நடப்பதால் கழிவுநீர் நிரம்பி சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும் தெற்கு மாட வீதி மறுபுறம் சாலையின் ஓரம் திறந்தநிலையில் சாக்கடைக் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதில் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி மலேரியா, யானைக்கால் நோய் போன்றவை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.