தேரோட்டம்

தியாகராஜ சுவாமி கோயில்...
திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பெருந்திருவிழாவையொட்டி, புதன்கிழமை  தேரோட்டம் நடைபெற்றது.
திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்துக்குச் சொந்தமான கதகாரண்யமாகிய திருக்குவளை என்னும் திருக்கோளிலி  தியாகராஜ சுவாமி தேவஸ்தான வைகாசி பெருந்திருவிழா ஏப்ரல் 29-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் மே 1-ஆம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, அதிகாலை 5 மணி அளவில் ரிஷப வாகனத்தில் தியாகராஜ சுவாமி தேருக்கு எழுந்தருளினார். இதையடுத்து, காலை 10.30 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. தேர் கீழவீதி,தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக மதியம் 1.30 மணியளவில் நிலையடியை அடைந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தின்போது, ஆங்காங்கே நீர்மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வரதராஜப் பெருமாள் கோயில்...
சீர்காழி அருகேயுள்ள கூத்தியம்பேட்டை வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
கூத்தியம்பேட்டையில் பெருந்தேவி தாயார் உடனாகிய வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் மே 11-ஆம் தேதி முதல் பிரமோத்ஸவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவைத் தொடர்ந்து, நாள்தோறும் சேஷவாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனங்களில் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து, வரதராஜப் பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு  திருமஞ்சனம், சாத்துமுறை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் எழுந்தருளினார். 
பின்னர், தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com