மன்மதீசுவரர் கோயில் குடமுழுக்கு
By DIN | Published On : 18th May 2019 07:18 AM | Last Updated : 18th May 2019 07:18 AM | அ+அ அ- |

குத்தாலம் ரயிலடி தெருவில் அமைந்துள்ள மன்மதீசுவரர் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, வியாழக்கிழமை காலை விநாயகர் அனுக்ஞை, கணபதி ஹோமத்துடன் உத்ஸவம் தொடங்கி, முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையில் பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்று கடம் புறப்பட்டது. சிவாச்சாரியார்கள் கடங்களைச் சுமந்து கோயிலை சுற்றி வந்து விமானத்தை அடைந்தனர். வேத விற்பன்னர்கள் வேதங்கள் முழங்க, வாண வேடிக்கைகள் வெடிக்க குடமுழுக்கு நடைபெற்றது.
பின்னர் மன்மதீசுவரருக்கு மூலஸ்தான குடமுழுக்கு மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன. திருமணஞ்சேரி உமாபதி சிவாச்சாரியார், நடனசுந்தரம் குருக்கள் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் சர்வ சாதகம் செய்து வைத்தனர். ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள் இளங்கோவன், ஜெயராஜ், தம்பி. சேகர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.